பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாராளுமன்ற நடவடிக்கைகளில் அவரவர்களும் அவரவர் தாய் மொழியில் பேச உரிமை வழங்குவதே ஜனநாயகத்தின் முதற் கடமை. அரசின் தேர்வுகளை அவரவர் தாய் மொழியில் எழுத உரிமை இருந்தாலேயே அறிவின் செழுமை வெளிப்படும். தொடர்பு மொழி கற்றுக் கொள்வது வேறு. அதையே அறிவு மொழியாக ஏற்றுக் கொள்வது வேறு, மேலும் இந்தி அல்லாத மாநில மக்களின் உத்தியோக வாய்ப்புகளுக்கு உத்தரவாதமில்லை. இப்படி பல்வேறு குறைகள் மலிந்து காணப்படும்போது அவற்றிற்கு உரிய மாற்றங்களைக் காணாமல் இந்தியை மட்டும் அலுவலக மொழியாக அமர்த்துவது நியாயமுமாகாது - நீதியுமாகாது. இந்திய ஆட்சிக்கு இந்தியோடு ஆங்கிலத்தை அலுவலக இணை ஆட்சி மொழியாக என்றும் இருக்கும்படி செய்வது நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லது. உலக உறவுக்கும் நல்லது. உடனடியாக அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றி நாட்டில் அமைதிச் சூழலை உருவாக்க முன்வரவேண்டும். இப்பொழுது இதைச் செய்யாது போனால், மத்திய ஆட்சியின் அலுவலக மொழியாக தேசீய மொழிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என்ற கிளர்ச்சி மேலோங்கி ஒரு புதிய சிக்கலைத் தோற்றுவிக்கும். நம்மைப் பொறுத்தவரையில், தேசிய மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் அலுவலக மொழியாவதை விரும்புகின்றோம் - வரவேற்கின்றோம். ஆனாலும், நாட்டின் பொருளாதார நிலை, ஆட்சிமுறை இவற்றின் காரணமாக தற்பொழுது அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றோம். இருந்தாலும், எதிர்கால இலட்சியம் அதுவாக இருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. எனினும், இந்தியக் குடிமகன் ஒருவன் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைப் பயில்வதும், அம்மொழிகளில் அறிவைப் பெறுவதும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாரத சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கைக்கும் நல்லது என்று கருதுகிறோம். இந்தி