பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

259


படிப்பதை, எதிர்ப்பதன் மூலம் நாட்டு மக்களுக்குள் உறவு ஏற்பட முடியாமல் போய்விடும். தென்னகத்து மக்கள் வட புலத்தில் பெரும்பான்மையோர் பேசுகிற, இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுபோல, வடபுலத்து மக்கள் தென்னகத்து மக்கள் பேசுகின்ற மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இம்முறையைக் கட்டாயப்படுத்தினாலும் ஒன்றும் தவறில்லை. தொழில், வணிகம் முதலியன வளரவும் பரவவும் இது அவசியமேயாம். ஆனாலும் எந்த ஒரு மொழியையும், ஆதிக்கத்தின் சின்னமாகத் தமிழன் ஒரு பொழுதும், ஏற்றுக் கொள்ள மாட்டான். ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டதும் நியாயமில்லை.

உடனடியாக மத்திய அரசு இந்தி ஆட்சி மொழியாகிறது என்கிற அச்சத்தைத் தவிர்த்து ஆங்கிலம் நீண்ட நெடிய நாட்களுக்கு காலவரையறையின்றி இணையாட்சி மொழியாக இருக்கும் என்று அறிவிக்கவேண்டும். மாநில அரசுகள் குறிப்பாகத் தமிழக அரசு தமிழை எல்லா வகையிலும் பூரண ஆட்சி மொழியாக ஆக்கும் முயற்சியை இன்னும் தள்ளிப்போடாது உடனடியாக நிறைவேற்றுதற்குரிய ஆக்கப் பூர்வமான முயற்சிகள் எடுக்க வேண்டும். இவ் விரண்டையும் அரசுகள் செய்யத்தவறினால் போராடுவது தவிர வேறு வழியில்லை; நாம் குறிக்கும் போர் இந்தி எதிர்ப்புப் போராக இருக்காது. தமிழ்ப் பாதுகாப்புப் போராகவே அமையும்! மாணவர்களின் மொழியுணர்ச்சி பாராட்டுக்குரியது. அவர்களின் மொழியுணர்வை, மொழியார்வத்தை தமிழைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது நமது கோரிக்கை அப்படி அவர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் நமது உதவியும் ஒத்துழைப்பும் என்றும் எப்பொழுதும் ஒல்லும் வகையெல்லாம் உண்டு. நம்முடைய எதிர்ப்புணர்ச்சியை முறைப்படுத்தி அமைதியாக அணிதிரண்டு காட்டுவது அதிகப் பயன் தரும் என்பது மாணவர்கள் அறியாததன்று. அரசின் முடிவும் மாணவர்களின் அமைதிப் போக்கும் நாட்டை நல்வழிப்படுத்துவதாக!