பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

287



மீண்டும் 1963 – இல் பாரதத்தின் ஆட்சி மொழிச் சிக்கல் தோன்றியது. அன்றைய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி "1965ஆம் ஆண்டுக்குப் பின்னரும் கூட மத்திய அரசினுடைய காரியங்களுக்காக இந்தியுடன் ஆங்கிலமும் தொடர்ந்து பயன்படுத்தலாம்” என்ற வாசகங்களடங்கிய ஆட்சி மொழிச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார். அஃதாவது 26-1-1965 முதல் இந்தி, பாரத நாட்டின் ஆட்சி மொழியாகி விடும். துணையாட்சி மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படலாம் என்பது பொருள்.

இச்சொற்றொடரில் “படலாம்” (may) என்ற சொல், ஆங்கிலம் தொடர்ந்து நீடிப்பதற்கு உறுதி தரவில்லை. ஆங்கிலத்தை அகற்றுவதில் இந்தி பேசாத மக்களின் விருப்பம் முதன்மையானது என்ற பண்டித நேருவின் உறுதிமொழி இச் சட்டத்தில் இடம் பெறவில்லை. இச்சட்டத்தின் படி இந்தி மெல்ல மெல்ல ஆங்கிலத்தையகற்றி அந்த இடத்தை முழுமையாகப் பிடித்துவிடுமோ என்ற அச்சம் இந்தி பேசாத மாநிலங்களிடையில் மேலோங்கி நின்றது. 1963 ஆம் ஆண்டில் ஆட்சி மொழிச் சட்ட மசோதாவின் மீது அமரர் அறிஞர் அண்ணா அவர்கள் தம் நிலையை விளக்கிப் பேசும் போது:

“நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியைக் கட்டாயமாக நுழைப்பதைத்தான் எதிர்க்கிறோம். ஆங்கிலம் காலவரையறையின்றி நீடிக்கப்பட வேண்டும். இந்தி மட்டுமே நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக இருத்தல் கூடாது. அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள நாட்டு மொழிகளையும், நாட்டின் ஆட்சி மொழிகள் என்று அறிவிக்கவேண்டும். இந்திய நாட்டின் மொழிச் சிக்கல் தீர்வதற்கு இது ஒன்று தான் வழி” என்று திட்டவுட்டமாக அறிவித்தார்.

ஆனால் பயன் ஒன்றும் விளையவில்லை. பண்டித நேருவின் உறுதி மொழியையே அலட்சியப்படுத்தியவர்கள்