பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்றைய உலக நாடுகளின் விதிகள் இடம் தருகின்றன ஆயினும் அது நடைமுறைக்கிசைந்த செயல் அல்ல. அப்படியே பார்த்தாலும் நமது நாட்டைவிடச் சிறந்த நாடு ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.

நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்திப் பொருள்களைப் படைத்துக் குவிக்க வேண்டும். அதற்கு உழைப்புத் தேவை. உழைத்து நாட்டின் வளத்தைப் பெருக்கிப் பாதுகாப்பதே சிறந்த ஆற்றல். நாட்டின் மக்கள் உழைப்பாற்றல் உடையவர்களாக உழைப்பவர்களாக விளங்க வேண்டும். நாட்டுப்பற்றின் செயற்பாடு, நாட்டின் வளத்தை – பெருமையைக் காப்பாற்ற கடமையைச் செய்தல் உழைத்தலாகும். உழைத்தல் தவம்; உழைத்தல் வேள்வி, உழைப்பே உயர்வு. ஒரு நாட்டில் உழைப்பவனே உண்பதற்கு உரிமையுடையவன். உழைப்பும் உழைப்பின் துறைகள் விரிவும். உழைப்பின் வழி பொருள் படைத்தலுமே அறிவியல் வளர்ச்சிக்குக் கால்கோள் செய்தன. உழைப்பு – உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலே நாகரிகங்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளன – அல்லது அழிந்துள்ளன. மனித வாழ்க்கையில் அரசியல், சமயம், கலை, இலக்கியம் முதலிய எல்லாவற்றிற்கும் அடிப்படை உழைப்பும் உற்பத்திப் பெருக்கமுமே யாகும்.

இந்திய நாட்டில் வறுமை அகன்றபாடில்லை. இந்திய நாட்டைப் புண்ணிய பூமி என்று போற்றிப் புகழ்கின்றோம்! வணங்குகின்றோம்! வாழ்த்துகின்றோம்! ஆயினும் நாட்டை எல்லா வளங்களும் பொருந்தியதாக நாம் இன்னமும் உருவாக்கவில்லை. ஏன்? "சுதந்தரம் என்பது உரிமைகளைத் தருவது” என்ற பிழையான பாடத்தைப் படித்துக் கொண்டுவிட்டோம். எங்கு பார்த்தாலும் உரிமைகளை மையமாகக் கொண்ட போராட்டங்கள், கடமையைப்பற்றியாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வேலை செய்வதற்குரிய – படைத்தலுக்குரிய ஆற்றல் குறைந்து, போராட்டம் என்ற பெயரில் உற்பத்திக்கு விடுப்பு: இலாப நோக்கத்தில்