பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

301


முறை. நாம் அவர்களுக்குத் தந்து வரும் கல்வி தன்னம்பிக்கையைத் தரக்கூடியதாக இல்லை. படைப்பாற்றல் உடையவர்களாக நாம் அவர்களை வளர்க்கவில்லை. கடுமையான உழைப்புக்கு அஞ்சுகின்றனர். உடலுழைப்புப் பணிக்கு முன்வரத் தயங்குகின்றனர். வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் படிக்காதவர்களின் தொழில் என்று பள்ளியிறுதி வகுப்பை எட்டிப் பார்த்தவன் கூறிக்கொண்டு வேலை தேடுகிறான். இந்த நாடு எப்படி வளர முடியும்?

நமது நாட்டை நாம் உழைப்பால் வளப்படுத்த வேண்டும் உளமார்ந்த உழைப்பு வேள்வி எல்லா மட்டங்களிலும் இயற்றியாக வேண்டும். காலமும் கருத்தும் ஆற்றலும் எஞ்சாமல் உழைப்பின் வழி பொருள்களாக்கப் பெறுதல் வேண்டும். கடமையே உரிமையின் வாயில், கடமையைச் செய்தலே நாட்டுப்பற்று. இன்றைய இந்தியாவின் தேவை கடமை வீரர்கள்! உழைப்பு வேள்வி: உற்பத்திப் பெருக்கம்! கடமை தாய்; உரிமை சேய்.

–"மக்கள் சிந்தனை” – 15–1–81


2. உண்மையான உழைப்பு தேவை


"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு"

– குறள் 739
என்று திருக்குறள் கூறும்.

நாடு என்றால் எல்லா வளங்களும் நிறைந்ததாக அமைய வேண்டும். அப்படியாயின் வளம் இயற்கையாய் அமைவதா? படைக்கப்படுவதா? என்ற கேள்வி எழும். பொதுவாக வளம் இயற்கையைச் சார்ந்ததேயானாலும் அந்த நாட்டில் வாழும் மக்களின் படைப்பாற்றலால்தான் வளம் படைக்கப்படுகிறது. படைப்பாற்றல் இல்லாத மக்களைப் பெற்றுள்ள நாட்டில் இயற்கை வளங்களும் கூடப் பயனற்றவை. எத்தகைய இயற்கைக் குறைகளுடைய நாடா