பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சட்ட சம்மதம் உடையதாக்கிவிட்டன. மதத் தலைவர்களும் அங்கீகரித்து "கடவுட் சம்மதம்” தெரிவித்துவிட்டனர். அதனால் இன்றைய இந்தியாவில் 'சமூகம்' 'சமுதாயம்' என்ற அமைப்புகள் உணர்வுபூர்வமாக இல்லை. இன்று மக்கள் கூட்டமே காணப்பெறுகிறது. மக்கள் கூட்டம் காடுகளைப் போன்றது. காடுகளில் ஒழுங்கு இருக்காது; நெறிமுறைகள் இருக்காது; தன்னிச்சைப் போக்காக மரங்கள் வளரும்; வல்லாண்மை வாய்ந்த தாவர இனங்கள் வல்லாண்மை குறைந்த தாவர இனங்களை அழித்துவிடும்; "வல்லாண்மையுடையனவே வாழும்” என்ற நியதியே உண்மையாகி வருகிறது. சமூகம் என்பது நந்தவனம் - பூங்கா பழத்தோட்டம் போல அமைந்தது சமூகம், சமூக அமைப்பில் ஒழுங்கு நிலவும்; நெறி முறைகள் இருக்கும் கூட்டுச் சிந்தனை - கூட்டுச் செயல்முறை விளங்கித் தோன்றும். சமூக அமைப்பில் வாழ்வோம்; மற்றவர்களும் வாழட்டும் என்ற எண்ணப்போக்கும் வாழ்வித்து வாழும் பெருந்தன்மையும் நிலவும். பாவேந்தர் பாரதிதாசனின் "உலகம் உண்ண உண்; உடுத்த உடுத்து” என்ற ஆணை நடைமுறையில் இருக்கும். சமூக அமைப்பில் ஒவ்வொருவரும் தனியே வளர்ச்சி பெறலாம். அதே போழ்து சமூகம் முழுமையும் ஒருங்கிணைந்து வளரவும் வாய்ப்பு உண்டு. யாரொருவருக்கும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வளர்ச்சிக்குரிய வாய்ப்புக்கள் மறுக்கப்படாத சமூகமே அறநெறியும் அமைதியும் தழுவிய நெடிய முன்னேற்றத்திற் குரிய வித்தும் அமைந்த சமூகமாகும். இத்தகைய சமூக அமைப்புகளும்கூட சிறியதாக இருந்தால் மிகவும் நல்லது. மனித இனத்தின் வரலாற்றிலேயே சிறந்த வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலையைக் கொண்டிருந்தது சிறிய சமூக அமைப்பு என்று வரலாறு உணர்த்துகிறது. எங்கெங்கு மக்கள் கூடிவாழ்வதற்கும், தங்களுடைய வாழ்க்கையின் பயன்களைத் தங்களுடன் கூடி வாழ்பவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்கும் ஏற்ற சூழல்