பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முதன்மை இடம் வழங்கப்பெறுதல் வேண்டும். ஏனெனில், தன்னலத்தில் பொது நலம் அடங்காது. பொதுநலத்தில் தனி மனித நலம் அடங்கும்; மேலும் பத்திரமாகவும் இருக்கலாம். கூட்டுறவு நிறுவனங்கள் அங்கத்தினர்களின் போதிய நிதி ஆதாரங்களைப் பெறுவது வரவேற்கத்தக்கது.

கூட்டுறவு நிறுவனங்களுக்கு, அவற்றின் நோக்கம், நிதி ஆதாரம் பரிந்துரைகளுக்கு ஏற்ப அரசு குறைந்த வட்டியில் கடன் தந்து உதவவேண்டும். கூட்டுறவு வளர்ந்தபின் அரசின் பொறுப்பாகிய மக்கள் நல அரசாங்கம் சிறப்பாக அமையும். எனவே கூட்டுறவின் வளர்ச்சியே மக்கட் சமுதாய வளர்ச்சி; நாட்டு வளர்ச்சி. கூட்டுறவு, மகத்தான மக்கள் இயக்கமாக வளரவேண்டும். கூடித் தொழில் செய்யும் உழைப்பில் மகிழ்வோம்; தியாகம் செய்வதில் பெருமை கொள்வோம்.

பள்ளிகள்

அடுத்து கிராமங்களில் வளரும் குழந்தைகள் தரமான கல்வி பெறுதல் வேண்டும். வளரும் தலைமுறைக்குக் கல்வியைத் தருதல் சமூகத்தின் பொறுப்பு; அரசின் கடமை. "இந்தியாவின் தலைவிதி அதன் பள்ளிகளில் நிர்ணயிக்கப்படுகிறது" என்பது கோத்தாரி கமிஷனின் கூற்று. மனிதனின் தரம் உயர்ந்தாலே முன்னேற்றம் கைகூடும். அதற்குக் கல்வியே துணை. இன்று கிராமங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளின் நிலை இரங்கத்தக்கது. பல தொடக்கப் பள்ளிகளுக்கு உரிய கட்டடம் இல்லை; கற்பிக்கும் கருவிகள் – சாதனங்கள் இல்லை; மாணவர் ஆசிரியர் விகிதம் எழுதிக் காட்ட இயலாத அளவுக்குத் துன்பம் நிறைந்தது. முதல் இரண்டு வகுப்பு ஆசிரியர்களின் பணி, பொறுப்பு வாய்ந்த பணியாகும். இந்த வகுப்புகளில் கூட 90 மாணவர்களைக் கொண்ட வகுப்புக்கு ஓராசிரியரே உள்ளார். பல இடங்களில் ஓராசிரியர் பள்ளிகளே மிகுதியும் உள்ளன. தொடக்கப் பள்ளிகளில் குறைந்தது 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்