பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்தக் குறிக்கோளுடன்தான் சங்க காலத்தில் காணப்பெறாத ஒப்புரவு நெறியைத் திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது. திருக்குறள் நெறியில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கடமைகளும் செய்தற்குரியவர்கள், உரிமைகளைப் பெறுதற்கும் உரியவர்கள். “ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற மார்க்சிய நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி. சமூகம், சமுதாயம் வலிமையாக இருந்தால்தான் நாடு வலிமையாக இருக்கும். நாட்டின் முன்னேற்றப் பணிகள் இடையீடின்றி நடைபெறும். அப்படியல்லாது ‘சமுதாயம்’ உருவாகத் தவறிவிட்டால் கொடுங்கோல் ஆட்சி வரும்; கலகங்கள் நடக்குங் களவும் காவலும் நடைபெறும். காவலர்கள் பெருகி வளர்வர். சிறைச்சாலைகள் நிரம்பும்.

திருக்குறள் நூல் சமுதாய நூல்; திருவள்ளுவர் நெறி சமுதாய நெறி. சமுதாயத்தைத் தொடர்ந்து நாடு வருகிறது. நமது நாடு – தாய் நாடு. இந்தியா. நாட்டுப் பற்று வேண்டும். நமது நாட்டைத் திருக்குறள் நெறியில் நாடா வளத்தனவாக ஆக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் வரிசையில் விரைவில் நாட்டைச் சேர்க்க வேண்டும். நாட்டுப் பற்றினை வற்புறுத்துவது திருவள்ளுவர் நெறி. இதுவே வாழும் நெறி.

பரபரப்பில்லாமல் சிந்தனை செய்வோம்! வெறும் ஆசைகளாலும் உணர்ச்சிகளாலும் தூண்டப்பெற்ற வாழ்வு என்னாகும்? திருஞானசம்பந்தர் அருளியதைப் போல “சாநாளும் வாழ் நாளும்” யாரறிவார்? ஆதலால், நாம் இன்று வாழ்வது உண்மை. நமக்கு வாய்த்திருக்கும் வாய்ப்புக்களும் அருமையானவை. ஏன் காலம் கடத்த வேண்டும். இன்று நன்று, நாளை நன்று என்று எண்ணிக் காலத்தைப் பாழடிப்பானேன்? இன்றே வாழத் தொடங்குவோம்! வாழத் தொடங்கியதன் முதற்படியாகக் குறிக்கோளைத் தெளிவாகச் சிந்தித்து முடிவு செய்வோம்! அக்குறிக்கோளை நோக்கி நடை பயணத்தைத் தொடங்குவோம்! தடம் புரளாமல் நடப்போம்! அவசியமெனில் ஓடுவோம்! இந்தப் புவியை