பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமையும் என்ற நம்பிக்கை இருப்பின் உலகமே எதிர்த்தாலும் அந்த முடிவில் உறுதியாக இருத்தல் வேண்டும். சிந்தனையின் வழி வாழ்க்கையின் முயற்சிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். சிந்தனையுடைய வாழ்க்கை அறிவார்ந்த வாழ்க்கை. சிந்தனையுடன் ஒன்றிய செயல். அறிவார்ந்த வாழ்க்கையின் செயற்பாடு; பயன்!

அறிவார்ந்த வாழ்க்கை வாழும் போது உழைப்பு ஒரு முக்கிய இடத்தை எடுத்துக் கொள்கிறது. காரியங்களை, தோற்றங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் காரணங்களைக் கண்டறிந்து மாற்றுதல் அறிவின் - அறிவியலின் பணி. ஆம்! இன்று நமது நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர். ஏன்? உடற்பிணிகள் தரும் துயர் தாங்கொணாத் தன்மையுடையன. சாதிச் சண்டைகள், மதச் சண்டைகள், பொருளமயின் விளைவுகள், கலகங்கள், கொலைகள், தற்கொலைகள்! இந்த இயல்புகள் நிறைந்த ஒரு நாட்டை, நாடெனக் கூற இயலுமா? திருவள்ளுவர் “நாடென்ப நாடா வளத்தன” என்றார். “எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தி” வாழ்தலையே நாடு என்று கம்பன் கவிதை காட்டுகிறது! “குறைவிலாது வாழ்க” என்று சைவம் வாழ்த்துகிறது! நமது நாடு, இந்த நிலையை என்று எய்தும்? இந்த வினாவுக்கு விடை எந்தத் தலைமுறையில் காணப்போகிறது? ஏன் இந்த அவலம்!

மானுடம் அற்புதமான படைப்பு, ஆற்றல்மிக்க படைப்பு. உலக வரலாற்றின் உயிர்ப்பே மானுடம்தானே! ‘மானுடம் வென்றதம்மா!’ என்று கம்பன் கூறுவான். மானுடம் வெற்றியொடு பொருந்திய வாழ்வினை இயல்பாக உடையது. ஆனால், வெற்றி எப்போது கிடைக்கும்? போராட்டம் இருந்தால் தானே வெற்றி! இன்று நம்மனோர் வாழ்க்கையில் போராட்டம் எங்கிருக்கிறது? போர்க்குணமே