பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

397


கூறட்டும். சிந்திக்கும் பழக்கமுடைய மனிதனுக்கு நல்லவாழ்வு அமையும். சிந்திக்கும் இயல்பும் பழக்கமும் உடைய மனிதர்கள் பரபரக்க மாட்டார்கள். விரைந்து முடிவு செய்யமாட்டார்கள். அதே போழ்து காரியக் கேடு அடையும் வகையில் காலந்தாழ்த்த மாட்டார்கள். சிந்திப்பவர்கள் சார்புகளில் சிக்கித் தவிக்காமல் நன்மையையே, வாய்மையையே, மனிதத்தையே மையமாகக் கொண்டு சிந்திப்பர். வரலாற்றுப் போக்கை எண்ணி அதற்கேற்ப ஒழுகலாற்றை அமைத்துக் கொள்வர். ஆயினும் வரலாறு சுழன்று வராமலும், தேங்கிப் போகாமலும் இயக்க நிலையில் முன்னேற உந்து சக்தியாக விளங்குவர். சிந்தித்துச் செயற்பட்டு வாழ்வது அறிவார்ந்த வாழ்வு.

சிந்தித்தால் மட்டும் வாழ்வு அமைந்து விடாது எண்ணினால் போதாது. எண்ணித் துணிய வேண்டும். சிந்தையின் முடிவைத் துணிவுடன் காண வேண்டும். அந்த முடிவைப் பற்றுக் கோடாகக் கொண்டு உறுதியுடன் ஆன்மாவை, புத்தியை, புலன்களை, பொறிகளை இயக்க வேண்டும். பலர் சிந்திப்பர்; நல்லவண்ணமாகவே சிந்திப்பர். ஆனால், முடிவுக்கு வரமாட்டார்கள் குழப்பமாகவே இருப்பர். ஏன் இந்த அவலம்: ஆசைகளாலும் விருப்பு - வெறுப்புக்களாலும், பயத்தினாலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிந்திப்பதே அரிது. ஒரோ வழி சிந்தித்தாலும் இவர்கள் முடிவுக்கு வரமாட்டார்கள். முடிவுக்கு வந்தாலும் அந்த முடிவில் உறுதியாக நிற்க மாட்டார்கள்; செயற்பட மாட்டார்கள்; “மனிதம்” மேம்பாடுற மிகப் பெரிய தடையாக இருப்பது பயமே! பயத்திலிருந்து விடுதலை பெறுவது மிகவும் அவசியம். வாழ்வாங்கு வாழ, பயத்தை விட்டொழிக்க வேண்டும். சிந்திக்கப் பழகவேண்டும். அந்தச் சிந்தனையும் சார்புகளைக் கடந்த சிந்தனையாக அமைதல் வேண்டும். சிந்தனையின் பயன் அதன் முடிவில் இருக்கிறது. சிந்தனையின் பயன் நல்லவண்ணமாக