பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவு – அறிவியல் வழியில் செல்லாது. பயன்தரும் வழியில் – வாழ்விக்கும் வழியில் செல்ல வேண்டுமாயின் அறிவும் உழைப்பும் இதயஞ் சார்ந்தவையாக அமையவேண்டும். இதயம் அன்பு வயப்பட்டது, அருளுந் தன்மையுடையது. இதயம் எப்போதுமே ஆக்கும். அறிவும் இதயமும் உழைப்பும் ஒருங்கிணைந்து இயங்கினால் உலகம் வளரும்; வாழும் உலக வரலாற்றில் அறிவும் இதயமும் சார்ந்த உழைப்பின் சாட்சிகள் சில உண்டு! இவை சிலவே! ஆயினும் ஆணவம், ஆதிக்கம் சார்ந்த இதயத்தை இழந்த உழைப்பின் வரலாறு மிகுதி! ஆயினும் நிலைத்து நிற்பது இதயம் சார்ந்த உழைப்பேயாம்!

வறுமை இயற்கையன்று; செயற்கை ஏழ்மை இயற்கையன்று; செயற்கை துன்பம் இயற்கையன்று வரவழைத்துக் கொண்டது. இந்த எண்ணப் போக்கில் எண்ணினால் இன்றுள்ள அமைப்பை எதிர்த்துப் போராட ஆர்வம் மீதூறும். கோழி முட்டைக்குள் உள்ள குஞ்சு, முட்டை ஓட்டை உடைக்க உள்ளிருந்தே முட்டை ஒட்டை மோதி மோதி உடைப்பதைப் போல, இருக்கும் இன்னாதனவாக அமைந்துள்ள உலகை மாற்ற இடையறாத – சோர்வில்லாத சிரத்தையுடன் கூடிய உழைப்புப் போர் நடத்த வேண்டும்.

உழைப்புப் பகை சோம்பல்! சோம்பல் உள்ளவர்கள் உழைக்க மாட்டார்கள்: சில சோம்பேறிகள் உழைப்பது போலக் காட்டுவார்கள். ஆனால், அந்த உழைப்புப் போலியில் படைப்பும் இயலாது; காத்தலும் இயலாது. சோம்பல் என்ற ஒன்று இருப்பதனாலேயே இந்த உலகில் வறுமை வாழ்ந்து கொண்டிருக்கிறது. சோம்பல் என்றால் ஒன்றும் செய்யாதிருத்தல் என்பது மட்டும் பொருளல்ல, செய்ய வேண்டியவை அனைத்தையும் முழுமையாகப் பயனுடைய வகையில் செய்யாததும் சோம்பலின் பாற்பட்டதேயாம். சோம்பலுடன் முழு முயற்சி செய்து போராட வேண்டும். செய்யும் வேலையில் சிரத்தையும், செய்யும் இலக்கை அடையும் வரையில் உழைப்பும் தேவை.