பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

403


காட்டினால் மனித சமுதாயம் தோன்றும். மனிதக் கூட்டம் தோன்றிய தொடக்க காலத்தில் சமுதாயமாகவே வாழ்ந்தனர். பொதுவுடைமைச் சமுதாயமே இருந்தது என்றெல்லாம் கூறுகின்றனர். உண்மையுங்கூட! ஏன் அந்தச் சமுதாய உணர்வு மறைந்தது? இதற்கு அறிவியல் உலகம் விடை காணவேண்டாமா?

இந்த உலகத்தின் இருப்பு நிலையை இந்த உலகத்தின் துன்பச் சூழலை எழுதிக் காட்டி அழவைத்த இலக்கியங்கள் பல உண்டு. ஆனால், இந்த உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணித் துணிந்து கூறிய அறிஞர்கள், படைப்பாளர்களைக் காணோம்! சங்க காலத்தில் அருமையாக இலக்கியப் படைப்பாளர் ஒருவர் தோன்றினார். அவர் பெயர் பக்குடுக்கை நன்கணியார். இவர் இந்த உலக வரலாற்றில் முதன் முதலாக "இன்னாதம்ம இவ்வுலகம்! இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!" என்றார். இந்தப் பாடலுக்கும் மரபு வழியில் பொருள் கூறிப் படைப்பில் இருந்த புரட்சித் தீயை அணைத்துவிட்டனர். அதாவது இந்த உலகம் துன்பமாக இருக்கிறது. ஆயினும் என்ன செய்வது? உலகத்தில் உள்ள துன்பத்தையே இன்பமாக நினைக்கும் மனநிலையைப் பெறுக என்று பொருள் கூறினர். அதாவது "துன்பம் இயற்கை துன்பத்தை ஏற்று அனுபவிக்கும் உளப்பாங்கைப் பெறுதலே வாழ்வியல்" என்று அறிவுறுத்தினார்கள். இதன் காரணமாக "வாழ்க்கையைச் சூழ்ந்துள்ள அறியாமை வறுமை, ஏழ்மை. முதலிய துன்பங்கள் இயற்கையாக அல்லது கடவுள் திருவருள் குறிப்பு வழி அமைந்தவை. இவற்றை அனுபவித்தே தீரவேண்டும். இவை மாற்றுதற்குரியன அல்ல. இல்லை, இல்லை! இவற்றை மாற்ற நினைப்பதே தவறு-பாபம்” என்று கூறிவிட்டார்கள். இதன் காரணமாகவே இந்தியா தொடர்ந்து சாதிப் பிரிவுகளிலும் பிணக்குகளிலும் சிக்கித் தவித்துச் சீரழிந்து வருகிறது. வறுமையிலும் ஏழ்மையிலும்