பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

429


இன்றைய தமிழகத்தின் சமயம். மேலும், அதே காலத்தில் சமுதாயத்தை விட்டு விலகிச் சமயம் தனியே போய்க் கொண்டிருந்தது. சமயம் சமுதாயத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பயன்படாது சடங்கு அளவோடு நின்று கொண்டிருந்தது. இம் மாபெரும் தவறினால் சமுதாயத்தில் வளமற்ற வாழ்வு காணப்பட்டது. இக்குறையை நிறைவாக்குவதே சமய வாழ்வு எனப் பல சமயச் சான்றோர்கள் வாழ்ந்து வழி காட்டத் தொடங்கினர். நடமாடுகின்ற மக்களினமும் தெய்வமே. அவர்களுக்குச் செய்வனவும் இறைவனுக்கேயாம் என்று எடுத்துக் கூறுவதோடு செயலிலும் ஈடுபட்டனர். சித்தத்தைச் சிவன் பால் வைத்து வையகத்துள்ளோர் இன்பத்துடன் வாழ்வதற்குரிய மக்கட் பணிகளில் ஈடுபட்டனர். பசித்தவர்களுக்குச் சோறு போட்டனர்; துணியற்றவர்களுக்குத் துணிகள் கொடுத்தனர். அழுக்குடையை வெளுத்துக் கொடுத்துத் தூய்மையைக் காப்பாற்றினர். பொதுவாகத் தொண்டின் வழியது தூய சமய வாழ்வு என எடுத்துக் காட்டினர். இதனை நமக்குச் சேக்கிழார் அருளிச் செய்த பெரிய புராணம் நன்கு விளக்குகிறது. மக்கள் வாழ்வொடு வாழ்வாகப் பின்னி மக்கள் நலம் பேணும் கொள்கை உடையதொரு சமயம் உலகில் வேறொன்றில்லை என்றே துணிந்து கூறலாம்.

இன்றைய நிலை

இன்றைய நிலையில் தமிழர் தம் சமய வாழ்வில் இரண்டு பகுதியாகப் பிரிந்து நிற்கின்றனர். பழந்தமிழர் வழி வந்து சங்கச் சான்றோர்களும் நால்வர் பெருமக்களும் வளர்த்துக் கொடுத்த நெறியில் முழு ஈடுபாட்டுடன் நிற்பவர் ஒரு சிலரே. பெயரளவில் நிற்பவர்கள் பெரும் பகுதியினர். அவர்கள், தீண்டாமை, வழிப்பாட்டுத் துறைகளில் தெய்வ தமிழ் இடம் பெறாமை, சமுதாயத்தின் இன்ப துன்பங்களில் பங்குகொண்டு வேண்டிய நல்லறத் தொண்டுகளைச்