பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்யாமை முதலிய குறைகளுடன் பெயரளவில் வாழ்கின்றனர்.

இன்னும் எண்ணிக்கையில் மிகச் சிலர் தமிழர் சமயநெறியை முழுதும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் மிகப் பிற்போக்கான இங்கர்சால் முதலிய நாஸ்திகவாதிகளுடைய வழியிலும் தமிழருக்குத் தொடர்பில்லாத நம்முடைய வாழ்வோடு பொருந்தாத வேறு பல சமயங்களை நல்லன என மாறுபட உணர்ந்து நாடுகின்றனர். இவர்கள் தமிழினத்தின் தன்மானத்தைச் சிதைக்கின்றனர் என்று வருத்தத்தோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது. இத்தகு நிலை களைச் சிந்தித்துப் பார்க்கும் தமிழன்பர்கள் உடனடியாகப் பழந்தமிழர் நெறியாம் சிவ நெறியை மக்கள் மன்றத்தில் வளர்க்க முன் வருவார்கள் என்று நம்புகின்றோம்.

நமது கடமைகள்

அவ்ப்பொழுது இனம், மொழி, நாகரிகம், அரசியல் படையெடுப்புக்களால் நம்முடைய தமிழ்ச் சமயத்தில் நுழைந்திருக்கின்ற கொள்கைகளில் தாழ்வில்லாத நன்மைகளைக் கைக்கொண்டு தமிழரின் அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பான சாதி சழக்கு நெறிகளைக் களைந்து நமது உயிரினும் இனிய தமிழ்ச் சமயத்தினை வளர்க்க வேண்டும். மக்களினம் மொழி இவற்றை நடுநாயகமாக வைத்துக்கொண்டு நமது சமயத்தை வளர்க்க எல்லாவகையான பொதுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகு நோக்கத்துடன்தான் தாயகத்தில் அருள் நெறித் திருக்கூட்டம் தொடங்கப் பெற்றுப் பேச்சு, எழுத்து, சமூகப் பணி, மாணவ மாணவி இல்லங்கள், கல்விச் சாலைகள் முதலிய பல துறைகளிலும் ஈடபட்டுச் சேவை செய்து வருகிறது. இந்தப் புனித அருள் நெறித் தொண்டில் தமிழகத்தின் ஆதினங்கள், மடங்கள், பல்கலைச் செல்வர்கள், பன்மொழிப் புலவர்கள், தேசியத் தொண்டர்கள், இளைய