பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

480

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உழைப்பைத் தருதலே நன்றி

ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார். அவருக்கு வேலைவாய்ப்பை ஒருவர் வழங்கினால் வேலைவாய்ப்பு எந்தத் துறையில் வழங்கப் பெற்றதோ அந்தத் துறையில் பயன்தரத்தக்க உழைப்பினைத் தருதலே நன்றி. மேலும் வேலை வாய்ப்புத் துறை மலடாகப் போய்விடாமல் மேலும் மேலும் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் வகையில் உழைப்பு அமைய வேண்டும். இன்று நம்முடைய நாட்டில் வழங்கப்பெற்றுள்ள ஒவ்வொரு வேலைவாய்ப்பும் அவர் வேலைக்கமர்ந்தவுடன் மலடாகிவிடுகிறது. அவருடைய உழைப்பிலிருந்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. ஏன்? அறிவறிந்த ஆள் வினையெல்லாம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் வாயில்களாகும்.

ஒருவர் தமக்குக் கிடைத்த பணியினை முறையாகச் செய்தாலே பலருக்கு இயல்பாகவே வேலை கிடைக்கும் வாழ்க்கை கிடைக்கும். இன்புறுநலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று இங்ஙணம் நமது நாட்டில் கடமைகளை இயற்றுவோர் எண்ணிக்கை அருகியுள்ளது. நன்றி என்ற சொல் நன்மையைச் செய்வது; நன்மையை வளர்ப்பது. நன்மை இடையறாது, ஆற்றொழுக்குப் போல வளரத் துணை செய்வது, உழைப்பது என்பதுவேயாகும். இந்த வகையில் நாட்டில் உள்ள அனைவரும் உழைத்தால் நாடு நலம் பெறும்.

–“மக்கள் சிந்தனை” 2–3–83
65. நம்பிக்கை உயர்த்தும்

நம்பிக்கை என்பது வாழ்விற்கு அடித்தளம். நம்பிக்கை ஓர் உள்ளப் பண்பு.நம்பிக்கை என்ற அகநிலைப் பண்பால் நன்மைகளே விளையும். ஒரோ வழி தீமையும் விளையலாம்,

[1]


  1. சிந்தனை மலர்கள்