பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

479



அன்பு என்பது என்ன?

அன்பும் ஒப்புரவும் உறவின் ஊற்றுக்கண்கள். அன்பு மின்சாரத்தினும் ஆற்றலுடையது; இயக்கத் தன்மையுடையது. அன்புடையோர் ஒப்புரவு நெறியில் நிற்றல் இயல்பு. ஒப்புரவு என்பதை ஒத்துழைத்தல் என்று கொள்ளலாம். ஒருவரின் இலட்சியங்கள் நிறைவேற ஒருவரின் வாழ்க்கை வளம்பெற ஒத்துழைத்தல் என்பது சமுதாய வாழ்வின் தவிர்க்க இயலாத கடமை. இந்தக் கடமைகளைப் பொறுப்புடன் நிறை வேற்றாதவர்கள் நிறைவேற்ற மனம் இல்லாதவர்கள்கூட “அன்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். வார்த்தையில் என்ன இருக்கிறது? வாழ்க்கையில் அல்லவா இருக்க வேண்டும். நன்றி, விசுவாசம், உழைப்பு, முயற்சி, அன்பு, காலம் சொல்லும், – என்ற சொற்கள், அந்தச் சொற்களுக்குரிய பொருளுக்கு இயைபின்றியே பயன்படுத்தப்படுகின்றன. வெறும் ஆரவாரத்துக்கே இந்தச் சொற்கள் பயன்படுகின்றன.

நன்றி என்பது என்ன

நன்றி என்ற சொல் நன்று, நன்மை, நல்லது என்ற அடிப்படையில் பிறந்த சொல். அதாவது வாயினால் சொல்வது நன்றி ஆகாது. நன்மையான ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகுதலின் மூலம் இந்த நன்மையைத் தொடர்ந்து பேணிக் காப்பதுமே நன்றி ஆகும். ஒருவர் ஒருவருக்குச் செய்த உதவிக்கு பிரதி உதவி செய்துவிடுவதோ, விரோதம் இல்லாது இருப்பதோ நன்றி ஆகாது. ஓர் அறிஞர் சொற்பொழிவு நிகழ்த்துகிறார் என்றால் சொற்பொழிவு நிகழ்ச்சி முடிந்தவுடன் அவருக்கு நன்றி கூறி முடித்துவிடுதல் நன்றியன்று. அச்சொற்பொழிவுகள் பயனைத் தெரிந்து, தெளிந்து வாழ்க்கையில் கடைபிடித்து அச்சொற்பொழிவுக்குரிய பயனைத் தருதலே உண்மையான நன்றி!