பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

521


ஏற்படுத்தும் விழா! பெரியோரைக் காணலும் வாழ்த்துப் பெறுதலும் நடக்கும் விழா!

பானையில் பால் பொங்கட்டும்! மனத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்! இல்லங்கள் எல்லாம் எழில் பெற்று விளங்கட்டும்! விவசாயத் தொழில் வளர்க! உழவர்குடி உயர்க! உண்டி கொடுப்போர் வளர்க! வாழ்க! பசுமாடுகள் பால்பொழிந்து தரட்டும் உழும் எருதுகள் உழுபடை சாலில் செல்வம் கொழிக்குமாறு செய்யட்டும்! இளைஞர்கள் விளையாடி மகிழட்டும்! காதலர்கள் கற்புக் கடம்பூண்டு வளர்க! வாழ்க!

77. [1]பொங்கல் சிந்தனைகள்

பொங்கலோ, பொங்கல்! பொங்கலோ, பொங்கல்! புதுப்பானையில் பால் பொங்கி வழிகிறது! செந்நெல் அரிசியும் வெல்லமும் போட்டு, நெய்யும் கூட்டிச் சுவையான சர்க்கரைப் பொங்கல் சமைக்கப்படுகிறது! ஞாயிறு முதல் வேண்டிய தெய்வங்களுக்கெல்லாம் படைக்கப்படுகிறது! அப்புறம் உண்ணும் படலம்!

புதுப்பானையில் பொங்கல்! பயன்படும் நிலையில் இருந்தாலும் பழைய பானையைப் பயன்படுத்துவதே இல்லை! புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல்! அது போலவே, பழக்கங்களைத் தவிர்த்துப் புதுப் பிறப்பெடுத்துப் புது மனிதனாகிப் புதியதோர் உலகம் படைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கலின் பின்னணி என்ன? செந்நெல் அரிசி எளிதில் கிடைத்ததா? காடு வெட்டித் திருத்திக் கழனியாக்கிப் பயிர்செய்து, பாதுகாத்து நெல் விளைத்து, அறுவடை செய்து, பின் நெல்லைக் காயவைத்து, குற்றி அரிசியாக்க வேண்டும். இது செந்நெல் அரிசியின் வரலாறு.


  1. மதுரை வானொலி 15.1.96