பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

522

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வெல்லக் கட்டி என்ன வீதியிலா கிடைக்கிறதா? கரும்பு சாகுபடி செய்து, கருப்பஞ்சாறு எடுத்துக் காய்ச்சி வெல்லமாக்க வேண்டும். கரும்பை நசுக்கிச் சாறு எடுக்க வேண்டும். “கரும்புபோல் கொல்ல” என்று திருக்குறள் கூறும். வெல்லம் போட்டவுடன் நெய் சேர்க்க வேண்டும். நெய்யின் வரலாறும் கடினமானதுதான்! இங்ஙனம் பல சோதனைகளைக் கடந்து வந்த பொருள்கள்தான் இனிய சர்க்கரைப் பொங்கலுக்குப் பயன்படுகின்றன! சர்க்கரைப் பொங்கலில் பயன்படுத்தப் பெறும் பொருள்களின் தரம் குறைந்தால் சர்க்கரைப் பொங்கலின் சுவை குறையும். அது போலத்தான், மானிட வாழ்க்கையும் பல சோதனைகளைக் கடந்து, இடுக்கு வழிகளைக் கடந்து முன்னேறி வந்தால் புதிய மனிதனாவான்; ஆக்கத்திற்குப் பயன்படுவான். இத்தகை யோன் வாழ்க்கையே அவனுக்கும் இன்பம் அளிக்கும்; மற்றவர்களுக்கும் இன்பம் அளிக்கும்.

“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு”

என்ற திருக்குறுள் அறிக திருஞானசம்பந்தரும் “இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும்” என்றருளியமையையும் அறிக. உலகில் சிறந்த சாதனையைச் செய்தவர்கள், வரலாற்றில் புகழ் பெற்றவர்கள் அனைவரும் எளிதில் அந்தப் பேற்றினை அடையவில்லை! கடின உழைப்பினை மேற்கொண்டனர்! அளவற்ற சோதனைகளுக்கு ஆளாகினர். வள்ளலார் வாக்குக்கு ஏற்ப, “உண்மை தூய்மையுற வசை வெல்லாம் வாழ்த்தெனக் கொண்டு” உழைத்தனர். உலகம் வளர்ந்தது; பூவுலகு புதுமைகள் பலவற்றைக் கண்டது. புதுமை வேட்டல் என்பது அறிவின் பரிணாம வளர்ச்சி. பழைமை புதுமையை ஈன்றெடுத்துத் தரும். புதுமை – பழைமைக்கு இது சுழற்சி முறை. இந்தச் சுழற்சி முறை இடையீடின்றி இயங்காது போனால் மானுட வாழ்க்கை