பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

523


தேங்கிப் போகும். எந்தச் சூழ்நிலையிலும் தேக்கம் விரும்பத்தக்கதல்ல.

நமது நாட்டில்தான் பழைமை விரும்பிகளுக்கும் புதுமை விரும்பிகளுக்கும் இடையே விவாதம்! பகுத்தறியும் அறிவு, அனைவருக்கும் பொது! ஆனால், இன்று யார் பகுத்தறிகிறார்கள்? ஆய்வு மனப்பான்மை அருகி வருகிறது. அறிவு என்பதற்கு அணுகுமுறை, ஆய்வு செய்யும் பாங்கு என்றே பொருள் கொண்டனர். பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் உண்மைகள், சமூக இயல் உண்மைகள் இருந்தன. அவற்றை நாம் படித்ததோடு சரி! ஆய்வும் சோதனையும் செய்யத் தவறியதால் தமிழர்கள் அறிவியல் துறையில் பின்தங்கினர்; தமிழ் மொழியும் இருபத்தோராம் நூற்றாண்டுக்கு ஏற்ப வளரவில்லை. இன்றளவும் முத்தமிழே! நான்காம் தமிழ், அறிவியல் தோன்றவில்லை. ஏன்?

நாம் நமது தமிழ் மொழியை உணர்ச்சி வேகத்துடன் அணுகுகின்றோம் ! நமது தாய்மொழியாம் தமிழைத் தெய்வமாக்கி வழிபாடு செய்கின்றோம்! ஆனால், தமிழை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை! பல்வேறு பகைகளைக் கண்டு வளர்ந்த தமிழ், வெள்ளத்தையும் நெருப்பையும் கண்டு மீண்ட தமிழ், ஆங்கிலத்தின் பாதிப்பிலிருந்து மீள இயலவில்லை!

தைத் திங்கள் பொங்கல் விழா! தமிழர் விழா! சேமமுற வேண்டும் எனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வோம்! உலகத் தமிழ் மாநாட்டில் நமது மாண்புமிகு முதல்வர் கூறியதைப் போல, அறிவியலில் துறைதோறும் தமிழை வளர்ப்போம்! தமிழ் வளர்ந்த மொழி! இனிய மொழி! எளிய மொழி! தமிழை அனுபவிப்போம்! தமிழை வளர்ப்போம்! “எங்கும் தமிழ்,! எதிலும் தமிழ்!” என்று ஆக்கும் முயற்சி செய்வோம் என்று இத்தைத் திங்களில் பொங்கல் திருநாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்!