பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

528

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உழைப்போருலகம் வளர வளர வையகம் வளரும். அதனாலன்றோ வள்ளுவம் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று கூறியது.

நமது நாட்டு உழவர்களின் வாழ்க்கை நிலை மன நிறைவைத் தரத்தக்கதாக இல்லை. அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வது நாட்டு மக்கள் அனைவரின் வாழ்க்கைக்கு அரணாக அமையும். உழவர் குடி உயர, உரிய உதவிகளைச் செய்ய இன்று உறுதி கொள்க; உயர்வு பெறுக.

உழவனின் தோழமை எருது, மானிட சாதிக்கு வளமான உணவை வழங்கும் பசுக்கள் நாட்டின் வற்றாத செல்வம், கால்நடைகள் என்று கூறப் பெற்றாலும் அவற்றின் ‘நடை’ சிறப்புடையது. அவை உழைத்தே வாழ்கின்றன. உயிர்க் குலத்தை வாழ்வித்தே வாழ்கின்றன. கால்நடைகளைப் போற்றி வளர்த்தால் செல்வநிலை வளரும் ! சிவபெருமான் எருதையும் கண்ணபிரான் பசுவையும் போற்றி வளர்த்து வழி காட்டினார்கள்!

கால்நடைகளை வருத்தாமல் வளர்க்க திருமந்திரம் வழி காட்டுகிறது. “யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை” என்பது திருமந்திரம். மாடு என்றாலே செல்வம்தான்! அத்தகைய பெருஞ்செல்வத்தைப் பேணிப் பாதுகாக்க உறுதி கொள்வோமாக!

பொங்கல் புது நாள் வாழும் வீட்டைத் தூய்மை செய்யும் நன்னாள் வீட்டின் உள்ளும் புறமும் தூய்மை செய்து வெள்ளையடித்துப் புற்று மண்ணால் தரை மெழுகி புதுச் சாணமிட்டு மெழுகிப் பொலியுண்டாக்கும் திருநாள்!

வாழக் கிடைத்த வாழ்க்கையை வைத்தியருக்கு ஒத்தி வைக்காமல், எளிதில் எமனுக்கு தானம் செய்யாமல் வாழ, வாழும் இடமும் சுற்றுப் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும்.