பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

527


அறுவடை விழா. ஆலயங்கள் முதல் ஆண்டிகள் வரை அவாவி நிற்பது நெற்களஞ்சியங்களையே!

அதனாலன்றோ மணிமேகலை “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்றது. “பகடு நடந்து கூற் பல்லாரோடுண்க” என்றும் அறவுரை தோன்றியது. உலகம் முழுதுக்கும் உணவளிக்கும் திருநாளாகிய பொங்கலுக்கு ஈடேது? இணை எது?

பொங்கல் திருநாள்! வீட்டைச் சாணமிட்டு மெழுகி தூய்மை செய்வதில் தொடங்கிப் புதுப்பானையில் புத்தரிசி இட்டுப் பொங்கிப் படைத்து, உறவு கலந்து உண்பதில் அமைந்திருக்கிறது. பொங்கல் திருநாளில் அறிவியலும் உண்டு. தாவர இனத்தை, பிற உயிர்க் குலத்தைக் காக்கும் கதிரவன் ஒளியைப் போற்றுதல்! மாமழைப் பொழிந்து மண்ணை வளமாக்கும் மழைத் தெய்வத்திற்கு மனமறிந்த போற்றுதல்!

நமது உழைப்பில் மிகுதியும் பங்கு கொண்டு உழைத்து விளைபொருளில் தரம் தாழ்ந்த வைக்கோலை மட்டுமே அவாவி நிற்கும் எருதுவிற்கு எண்ணத்திற் சிறந்த பாராட்டுகள்! நெல்லின் கழிவாகிய தவிட்டையும், சமையலின் கழிவாகிய கழுநீரையும் அமுதமென உண்டு அமுதத்தினும் சிறந்த பாலைப் பொழிந்து பாரினை வளர்க்கும் பசுக்களுக்குப் பத்திமையோடு கூடிய வழிபாடு!

ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோருக்கு வழிபாடு! தத்தம் அகவை நிலையில் ஒத்தாருடன் கூடி விளையாடும் களிப்பு விளையாட்டுக்கள்! ஆம்! வாழ்க்கையின் துறைதோறும் தழுவிய பொங்கல் திருநாளுக்கு ஈடேது? இணை எது?

அன்புடையீர், உலகம் முழுதுக்கும் உழுது உணவளிக்கும் உழவர் பெருங்குடி மக்களை எண்ணுமின்! உழவர்குடி உயர உழைத்திடுங்கள்! உழவுத் தொழிலில்