பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

529



விலை மதிக்க முடியாத மானிட வாழ்க்கையைச் சீரழியச் செய்யும் நச்சுப் புழுக்களுக்கு இரையாகாமல் பாதுகாக்க என்றும் எப்பொழுதும் வீட்டில் உள்ளும் புறமும் தூய்மை பேணுங்கள்! எங்கும் காணப்படும் தூய்மை திருவருட் சிந்தனையைத் துரண்டும்.

வீட்டின் தூய்மை மட்டும் போதாது. வீதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள ஊர் கூடித் திட்டமிடுங்கள்! ஊரும் ஊரின் சுற்றுப்புறமும் தூய்மையாக இருந்தால்தான் தூய்மையான காற்று கிடைக்கும். தூய்மையான காற்றே தூய்மையான சிந்தனைக்கு அடிப்படை. பொங்கல் புது நாளில் பூவுலகம் எங்கும் தூய்மை பேணுவோமாக!

வீடும் வீதியும் தூய்மையாக இருந்தால் போதுமா? உடலும் உயிரும், அறிவும் உணர்வும் தூய்மையாக இருக்க வேண்டும். ஆதலால், அன்பு நெறியில் மனத்தை, உயிரை வளர்த்து உலகை வளர்ப்போமாக! பானையில் பால் பொங்கி வழிவதைப் போல மகிழ்ச்சி மனதில் பொங்கி முகத்தில் மலர்வதாக!

ஆண்டுதோறும் வழக்கமாக வரும் பொங்கலானாலும் புதுப்பானையும் புத்தரிசியும் தேடுகிறோமல்லவா? அது போல வாழ்க்கையை வழக்கங்களுக்கு மட்டும் அடிமைப்படுத்தாமல் புதிய அறிவினைத் தேடுக! புதிய உணர்வினைப் பெறுக! புதுமைகளைப் படைக்கும் ஆர்வம் கொள்க! கரும்பு போல் வாழ்க்கை இனித்திடுவதாக.

கரும்பு, அடி முதல் நுனி வரை இனிப்பதைப் போலச் சமுதாயம் முழுதும் இன்புற்று வாழ இப்பொங்கல் புது நாளில் பிரார்த்தனை செய்வோமாக! பணிகளைச் செய்வோமாக! பொங்கல் வாழ்த்துக்கள்!