பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

531


உருவாக்குகிறது. வீடுகளைப் பழுதுபார்த்தல் போல் மானுட வாழ்க்கையின் மிகச் சிறந்த கருவியாகிய உடம்பையும் மருத்துவ சோதனை செய்து மருத்துவம் செய்து கொண்டு, நலமுற வைத்துக் கொள்ள வேண்டும். உணவை மருத்துவ அடிப்படையில் தேர்ந்து உண்டால் மருந்து தேவையில்லை. இல்லையெனில், மருந்து தவிர்க்க இயலாத தேவையாகி விடும்! வெளித் தோற்றத்தில் மட்டும் நல்ல வீடாக அமைந்தால் போதாது! அகநிலையிலும் நனிசிறந்து விளங்க வேண்டும். வீட்டின் சாளரங்களால் காற்றின் வெப்பம் குறைவதைப் போல மனத்தின் சாளரமாகிய வாயினால் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து அக நிலை வாழ்க்கையில் உள்ள வெப்பம் குறைய வேண்டும். நல்லெண்ணம் கொள்ள வேண்டும். வீட்டின் சுவருக்கு வண்ணப்பூச்சால் அழகூட்டுவதைப் போல, மனத்தினை மனித நேயம் என்ற வண்ணத்தால் அழகூட்ட வேண்டும். வீட்டில் ஒளிவிளக்கு ஏற்றி அழகூட்டுதல் போல, அகநிலையில் அறிவொளி கண்டு மகிழ்தல் வேண்டும். நம்மில் பலர், தீபாவளித் திருவிழாவின் போதுதான் புத்தாடை உடுத்துகின்றனர். இது தவறன்று. இதனால், பொருளாதார அடிப்படையில் குடும்பச் செலவு பகிர்வாகிறது. இயன்றால், பொங்கல் திருநாளின்போதும் புத்தாடை உடுத்துதல் சிறப்பு! நல்ல தூய்மையான ஆடை உடுத்துதல் வேண்டும். புத்தாடை உடுத்தினால் மட்டும் போதாது. வேண்டாத நேற்றையக்கவலை சுமந்த வாழ்க்கையைத் தூரத் தள்ளிவிட்டுப் புத்துணர்வு மிக்க புதிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் நாளும் உடலையும், உயிரையும், உணர்வையும், அறிவையும் புத்துணர்வுடைய தாக்கிக் கொள்ளுதல் வேண்டும். இது வாழ்வுக்கலை! இளமையைக் காக்கும் வாழ்வியல் முறை.

அடுத்து என்ன? பொங்கல்! ஆம்! சுவைமிக்க சர்க்கரைப் பொங்கல்! செந்நெல் அரிசியும் செங்கரும்பின் சாறும் கூட்டிச் சுவையாகச் சமைத்த சர்க்கரைப் பொங்கல்!