பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

532

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆம்! வாழ்க்கையிலும் சர்க்கரைப் பொங்கலைப் போல மகிழ்ச்சி சிறந்திடுதல் வேண்டும்! அதோ, காதில் விழுகிறது! “பொங்கலோ பொங்கல்!” என்னும் மங்கல ஒலி! ஆம்! பானையில் பால் பொங்கி வழிகிறது. பொங்கல் பால்! ஜனநாயகம் பொங்குக! சமதர்மப் பால் பொங்குக! வாழ்க்கை, கசப்பாக ஆகிவிடுதல் கூடாது! கொலைகளும் தற்கொலைகளும் கூடாது! கூடவே கூடாது! அதனால்தான் சர்க்கரைப் பொங்கல்! மானுட வாழ்க்கை முழுவதும் சர்க்கரைப் பொங்கல் போல இனிமை தவழுட்டும! இன்பம் பொங்கிப் பொலிக! பானை பிடித்தவளின் பாக்கியம் பொங்கலின் சுவை! நமது சகோதரிகளின் கைவண்ணமே களிப்பூட்டும் சர்க்கரைப் பொங்கல்! நமது சகோதரிகளின் வாழ்விலும் சுதந்திரமும் மகிழ்வும் பொங்கட்டும்! பொங்கலன்று வீட்டு வாசற்படியின் சூழ ஒளிவிளக்கிற்கு வாழ்வு தருக! மகளிர்குலம் களிப்பில் சிறந்து “பொங்கலோ பொங்கல்” என்று களியாட்டம் ஆடுக.

மானுட வாழ்க்கையின் இரட்டை நாடிகளாக விளங்குவன வேளாண்மை! கால்நடை வளர்ப்பு! பொங்கல் விழா. வேளாண்மைக்கு முடிசூட்டும் விழா ! வேளாண்மையைத் தொழிலாக உடையவர்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும். இன்றைய அரசு, இதுபற்றிச் சிந்தனை செய்கிறது! காரிருள் நீங்கட்டும்! கதிரொளி தோன்றட்டும்!

அடுத்து, கால்நடைகளைப் போற்றும் விழா! மாட்டுப் பொங்கல் விழா! மனிதன் பிறந்து மொழி பயின்ற காலம் முதல் அவனுக்குப் பாலூட்டி வளர்த்த பசுக்களின் தியாகம்! பல்முளைத்த காலம் முதல் உண்டு வளர, சோறும் காய்கறிகளும் கொடுத்த உழவு மாடுகள்! நமது உணவில் புதிய புதிய சுவைமிக்க உணவுகள் இடம் பெறுகின்றன! ஆனால் நம்மை வாழவைக்கும் கால்நடைகளுக்கு வைக்கோலும் புல்லும்தான் உண்வு! “உழுத நோன்பகடு அழிதின்றங்கு” என்ற புறப்பாடல் அடிகளை நினைவு கூர்க!