பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

544

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மேற்கொண்டுள்ள வேளாண்மையில் சீரான முயற்சி இருக்கிறது. மற்றபடி நமது அன்றாட வாழ்க்கையை இயக்கும் தொழிலாளிகள் தங்கள் பொறுப்பைச் சீராகச் செய்து வருகிறார்கள். இன்னும் சிறப்பாகவும் பொறுப்பாகவும் செய்யலாம் என்று கருத இடமிருக்கிறது. அறிவியல் சார்ந்த தொழில்நுட்பத்துடன் நமது வேளாண்மையும் கால்நடையும் வளர்ந்தால் மேலும் பயன் கூடும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் இத்துறைகளில் ஈடபட்டுள்ளவர்கள் உழைக்கிறார்கள். ஆனால் இவர்களுக்குத்தான் போதிய ஊதியம் இல்லை. வாங்கும் சக்தியும் இல்லை. மேலே உள்ள அறுபது கோடி மக்களை இந்த முப்பது கோடியே சுமப்பதால் நலி வடைந்து போய்விடுகின்றனர்; ஏழைகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலிருந்து நாட்டை மீட்க வேண்டும்.

பொங்கல் திருநாள், உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல் என்று வருவதெல்லாம் விழக்கள் மட்டும் அல்ல! படிப்பினைகள் கற்றுத் தரும் வாழ்வியல் விழாக்கள்! உழுதுண்டு வாழ்வார் உலகத்துக்கு ஆணி! உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உழவர் உலகம் மேம்பாடடைய வேண்டும். வெல்லம் கரும்பின் பயன்! கரும்பு கடினமான பக்குவமுறைகளுக்கான பிறகே வெல்லமாகிறது! அதுபோல மனிதன் கடின உழைப்புக்களினால் வருந்தினால்தான் மனிதனாக, புவியை நடத்துபவனாக வாழமுடியும்! நெய் - எத்தனை முயற்சிகளுக்குப் பிறகு நெய்யைக் காண்கிறோம்! வாழ்க்கையில் மேம்பாடு அவ்வளவு எளிதா என்ன? நெய்யை நினைத்துப் பாருங்கள்! அத்தனை பாடுபட்டால் தானே நமது வாழ்வு வளமுடன் மலரும்! புவியை நடத்தலாம்! பொதுவில் நடத்தலாம்! செந்நெல்லும் செங்கரும்புச் சாறும் சுவையூறும் நெய்யும் சேர்ந்தாலும் சர்க்கரைப் பொங்கலாக்கும் கைவண்ணம், தொழில் வண்ணம் வேண்டாமா? அதுபோல வாழ்க்கையில் எத்தனை எத்தனை பேறுகள் கிடைத்தாலும் அத்தனையையும்