பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

553


என்ற ஒழுக்கக்கேடுகள் தனிமனிதர்களிடம் இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து பொருளாதார ஆதிபத்தியப் போட்டிகள் தொடங்கி வளர்ந்தன. இதனைத் திருக்குறள்,

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும்"

என்று கூறுகிறது. நாட்டில் செப்பமான சமுதாய அமைப்பு இல்லாவிடின் அரசையே அச்சுறுத்தும் கயமைக் கூட்டம் வளரும். இன்றைய நமது நாட்டின் நிலையும் இதுவே.

இந்தக் கேடுகளைத் தவிர்க்கத் திருக்குறள் ஒப்புரவறிதல் என்ற வாழ்வியல் நெறியை அறிமுகப்படுத்துகிறது. ஒப்புரவறிதல் என்பது கூட்டுறவுத் தத்துவம் போல ஒரு கூட்டு வாழ்க்கை முறை. “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற தத்துவத்தின் வழி மலர்வது கூட்டுறவு வாழ்க்கை. நமது நாட்டில் இந்த கூட்டுறவு வாழ்க்கையும் வளரவில்லை. விளங்கவில்லை. ஏன்? எல்லாவற்றுக்கும் அரசின் தலையீடே காரணம். சமூகநீதி தழுவிய ஒப்புரவு வாழ்வியலே திருக்குறள் காட்டும் பொருளாதார வாழ்க்கை.

திருக்குறள் தோன்றி 2000 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. திருக்குறள் தோன்றிய காலத்திலிருந்து அனைத்து இலக்கியப் படைப்பாளர்களாலும் விரும்பி ஏற்கப்பட்ட நூல்! திருக்குறளை விரும்பிக் கற்றவர்கள் பலர். திருக்குறளை அனுபவித்துப் படித்து உரையெழுதியவர்கள் பலர். திருக்குறள் பலமொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது. திருக்குறள் உலக அங்கீகாரத்தைப் பெற்ற நூல். ஆயினும் இன்னமும் திருக்குறள் தோன்றியதன் நோக்கம் நிறைவேறவில்லை; சமுதாய மாற்றம் ஏற்படவில்லை.

திருக்குறள் தோன்றிய பொழுது இருந்த சமுதாயம் அப்படியேதான் இருக்கிறது. அன்று திருக்குறள் கற்காமல் அறியாமையில் கிடந்து உழன்றார்கள். இன்று திருக்குறளைக்