பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

554

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கற்றும் அறியாமையிலேயே கிடந்து உழல்கின்றனர்! அன்று மனித குலத்தில் சாதிகள் இருந்தன. இன்றும் சாதிகள் இருக்கின்றன. ஆனால் அன்று சாதிமுறைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்றோ சாதி முறைகள் நெகிழ்ந்து கொடுக்காமல் இறுக்கமாக இருக்கின்றன. அன்றும் வறுமை இருந்தது. இன்றும் வறுமை இருக்கிறது. திருக்குறள் சமுதாய மாற்றத்தை உருவாக்கவில்லை. ஏன்? திருக்குறளை நாம் இலக்கியமாகக் கற்கிறோம்! ஆம்! திருக்குறள் ஓர் இலக்கியமாக விளங்கலாம். ஆனால், திருக்குறள் இலக்கியம் மட்டுமா? திருக்குறள் ஒரு சமுதாய நூல்; அரசியல் நூல்; அறிவு நூல், சமுதாய வளர்ச்சித் திசையில் மனிதனைத் தூண்டி உந்திச் செலுத்தும் கருவி நூல் என்பதை நம்மில் பலர் உணர வேண்டும்.

திருக்குறள் அறிவைக் கருவியாகக் காட்டுகிறது. துன்பங்கள் தொடர் கதைகளாக வளராமல் புறவாழ்வு படைப்பதே அறிவு “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்பது திருக்குறள். வாழ்க்கைக்குப் பொருள் தேவை: “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை”. பொருள் செய்து குவித்தல் வேண்டும். “செய்க பொருளை” - என்று திருக்குறள் கூறுவதால் உற்பத்திப் பொருளே சிறப்புடைய பொருள் என்று கொள்க. அறிவறிந்த ஆள்வினையுடையராதலே சிறப்பு; முறை செய்யும் அரசு தேவை என்றெல்லாம் வாழ்வியல் காட்டிய திருக்குறள், தமிழ் நாட்டில் சமுதாய மாற்றத்தை உருவாக்கவில்லை. ஏன்? ஆழமாகச் சிந்தனை செய்வோமாக.

இனிய அன்புடையீர்,

திருக்குறள் பேரவை தோன்றி இருபது ஆண்டுகள் ஆன பிறகும் கூடத் திருக்குறள் ஒரு கருவி நூல் என்ற அறிவை, உணர்வை நாம் எவ்வளவு தூரம் பெற்றிருக்கிறோம் என்பது ஆய்வுக்குரியது. இந்த நாடு, இந்தச் சமூகம் எப்படி அமைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் எத்துணை பேர்!