பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்றாடச் செலவுகள், தனித்தனிக் கணக்குகள் இத்துணையையும் கணக்குப் போட்டுப் பார்த்து, அத்துணை பேரும்-அந்தக் கிராமத்தில் உள்ள எல்லா மக்களும் சேர்ந்து ஒரு கூட்டுறவு பண்டக சாலையை வைத்தால் எத்துணைப் பொருள் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பார்க்கவேண்டும்.

மேலும், இன்று பல கடைகளில் பாத்திரங்களில் பல பண்டங்கள் இல்லாமலே இருக்கும். இதற்குக் காரணம், போதிய முதலீடு இன்மையே! இதுபோலவேதான் விவசாயமும், வேறுபல துறைகளும் பொதுவாகப் பலரிடம் தனிமனித உணர்ச்சிகள் வளர்ந்திருப்பதால் அவர்களும் அல்லற்படுகிறார்கள்-சமுதாயத்தையும் அல்லற்படுத்துகிறார்கள். பலரிடம் சிறிய அளவில் சிதறிக் கிடக்கின்ற மூலதனத்தைக் கூட்டுறவு மூலம் ஒன்றாக்கிப் பெரிதாக்கபெரும் மூலதனமாக்க முடியும். பலர் முயன்று, நிறைந்த செலவில் குறைவான இலாபத்தைப் பெறுவதோடன்றிச் சிலரே இலாபத்தைப் பெற்றுப் பலர் பெறாமல் இருப்பதால் ஏற்படுகின்ற பொருளியல் ஏற்றத்தாழ்வு அவ்வழி ஏற்படுகின்ற விருப்பு வெறுப்புணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை பெற, சிலர் முயன்று குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பெற்று அன்போடியைந்த உறவு வாழ்க்கை வாழத் துணை செய்யும் கூட்டுறவு வாழ்க்கை. அதற்கு கூட்டுறவு வாழ்க்கை புதிய பாரத சமுதாயம் என்ற பெரு வண்டியின் இன்னோருளையாகும். பஞ்சாயத்து, கூட்டுறவு என்ற ஈருளைகளையும் இணைக்கின்ற அச்சு மனங்கலந்த - உளமொத்த நம்பிக்கையேயாகும். உருளைகள் அச்சோடு பொருந்தி - அவை சுழலும்போது கழன்று ஓடாதவாறு தடுத்து நிறுத்தும் அச்சாணிகள் தந்நலத் துறவும் பிறர் நலம் பேணும் வெற்றியுமே யாகும். இத்தகு சமுதாயம் பெரு வண்டியை இணைத்துக் கோத்துச் செலுத்த சுதந்திர பாரதக் குடிமக்களாகிய நாம் அனைவரும் தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்வோமாக!