பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

57


குறிப்புக்களைப் பெற்றுக் குறைபாடுகளை நீக்கி நிறைவுபடுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். பஞ்சாயத்து ஆட்சி என்று வருகின்றபொழுது, மேலேழுந்த வாரியாக வரி வசூலித்தல், செலவு செய்தல் ஆகிய இரண்டை மட்டுமே வைத்துப் பஞ்சாயத்தின் நடைமுறைகளை அளந்து பார்க்கக் கூடாது. பஞ்சாயத்து மூலம் வளரவேண்டிய ஆட்சித்திறன்-உற்பத்திப் பெருக்கம், கிராம ஒற்றுமை, நாட்டுப்பற்று, கிராம மக்களிடையே உடன் பிறப்புணர்ச்சி, கல்வி வளர்ச்சி சிறந்த-காலத்திற்கேற்ற மனவளர்ச்சி ஆகியன மக்களிடையே வளர்ந்து வலுப்பெற்றிருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். இத்தகு தூய-சிறந்த பஞ்சாயத்து, சமுதாயம் என்ற பெருவண்டியின் ஓர் உருளையாகும்.

“கூடித்தொழில் செய்தால் கோடி லாபம் பெறலாம்” என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். கூடி வாழ்ந்தால் நாம் கோடி நன்மை பெறலாம். ‘குறைந்தகாலத்தில்-குறைந்த செலவில்-குறைந்த உழைப்பாற்றலின் மூலம் மற்றவர்களுக்குக் காழ்ப்போ கசப்போ, ஏற்படுத்தாமல் பொருள் தேடிக்குவிக்கும் புதிய முறையைக் கையாள வேண்டும். அந்தப் புதிய முறையின் பெயரே கூட்டுறவு, கூடிவாழ்தல் மனித சமுதாயத்தின் சிறப்பொழுக்கம், அதனால்தான் மனிதர்களைச் சுற்றியே நாடும் நகரமும் எழுகின்றன. அவ்வாறு கூடிவாழ்கின்ற வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதன் மூலம் தனிமனிதனும் பண்புகள் நிறையப் பெற்றுப் பக்குவமடைகிறான். அத்தோடு சமுதாயமும் பொருள்வளம் பெற்றுப் பொலிவுறுகிறது. குற்றங்கள் குறைகின்றன-காவல்கள் நீங்குகின்றன.

நம்முடைய சமுதாய அமைப்பில் கூட்டுறவு இயக்கம் ஒரு முக்கியமான-பொறுப்பு வாய்ந்த இடத்தைப் பெறுகிறது. ஒரு கிராமத்தில் இன்று 600 வீடுகள் இருக்கின்றன என்றால் 40 அல்லது 50 கடைகள் இருக்கும். அத்தனை கடைகளுக்கும் இடவாடகை, ஊழியர்கள், மேலாளர்கள், தனித்தனியே