பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நாலுபேர் அடக்கம், எளிமை, சொல்லும் முயற்சியை விடக் கேட்டல் ஆகிய நற்பண்புகளிருந்தால் விளங்கித் தோன்றலாம். இப்பண்புகளைப் பெற்றுப் பலர்முன் தோன்றுக! அவ்வாறு வெளிப்படுதற்கு இயலவில்லையெனில் வெளிவராதிருத்தலே நன்று.

புகழ்பட வாழத் தெரியாதார், பலர் முன் தோன்றுதல் வசையைக் கைக்கொள்ளலாகும். இதனால் யாருக்கும் பயனில்லை. மேலும், ஒருவரின் வசைப்பட்ட வாழ்க்கை பலருடைய இசை பொருந்திய வாழ்க்கையைக் கெடுக்கும். அதனால் தோன்றுதலைத் தவிர்த்திடுக என்றார்.

‘புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ(து) எவன்.’

237

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள் தமது இழிவினை நோக்கித் தம்மையே நொந்து கொள்வதில்லை. ஆனால், பிறர் தம்மை இகழ்ந்து கூறினால் உடனே நொந்து வேதனைப்படுவர். இது ஏன்?

புகழ் என்பது ஒருவருடைய வாழும் முறையால் பெறுவது. ஒருவருடைய புகழுக்கும் இகழுக்கும் அவரே பொறுப்பு. இங்ஙனம் புகழ்பட வாழ முயற்சி செய்யாதவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டு திருத்தங்களைக் கண்டு புகழ்பட வாழ்தல் முறை. அங்ஙனம் வாழ முயற்சி செய்யாதவர்கள் மற்றவர் இகழும்பொழுது வருந்திப் பயனில்லை.

‘வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.’

238

ஒருவன் தனக்குப் பின்னும் தன்புகழ் விளங்கி நிற்குமாறு வாழாமற் போனால் அவன் வாழ்க்கை மக்களால் பழிக்கத் தக்கதாகும்.