பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தயாராக இருக்கிறது. ஆனால் தம்மைச்சுற்றி வாழும் மனிதருக்கு எதையும் செய்ய விரும்புவதில்லை. இது தெய்வ நம்பிக்கை ஆகாது; கடவுள் வழிபாடு ஆகாது.

தெய்வ நம்பிக்கை உடையவர்கள் மற்றவர்களின் உரிமைகளை மதிப்பார்கள்; உலகம் உண்ண உண்பார்கள்; உலகம் உடுத்த உடுப்பார்கள். தெய்வம் இருப்பதை நம்புகிறவர்கள், மற்றவர்களை வாழ்வித்து வாழ்வார்கள்.

தெய்வ நம்பிக்கை உள்ள நாட்டில் தீண்டாமை இருக்காது. பகை வளர்க்கும் வேற்றுமைகள் இரா. எல்லாரும் கூடித் தொழில் செய்வர்; ஒப்புரவு நெறியில் வாழ்ந்தின்புறுவர்; இதுதான் சொர்க்கம்.

சந்து பொந்துகளில் சாதிகள் வாழ்கின்றன! குல கோத்திரச் சண்டைகளின் பேரிரைச்சல் கேட்கிறது! சோம்பித் திரியும் மதியிலிகள் எங்கும்! தெருவுக்குத் தெரு வறுமொழியாளர்கள்! வம்பரத்தர்கள்! ஒருவரை ஒருவர் அடுதல், தொலைத்தல் ஆகிய இழி செயல்கள்! வறுமை, ஏழ்மையின் கோர தாண்டவங்கள்! இங்ஙனம் விளங்குவது ஒரு நாடாகாது; அதுவும் தெய்வம் இருக்கும் நாடாகாது.

பூம்புகாரில் செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கோவலன் நாட்டின் சூழ்நிலையால் பாதிக்கப் பெற்றவனாகி, வாழ்வதற்காக மதுரைக்கு வருகின்றான். “வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப்புகுந்த” என்பது கண்ணகியின் வாய்மொழி.

வாழ்கிறவர்களை வாழ்விப்பதுதான் நல்ல அரசு. ஒருவருடைய வாழ்வுரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், கோவலன் உயிர், பாண்டியப் பேரரசால் பறிக்கப் பெற்றது. கோவலன் கொலையால் ஆற்றொனாத் துயரத்தைக் கண்ணகி அடைந்தாள் என்பது உணமை.