பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



துன்பத்தை அனுபவிக்க மனம் எடுத்துக் கொள்ளும் நிலையில் துன்பத்தின் வேகம் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டு மல்ல. துன்பத்தை அனுபவிக்கும் உணர்வு நிலையில் துன்பத்தின் வேகம் தணிகிறது; விவேகம் பிறக்கிறது. அதனால் தீயூழும் வெற்றிகளாக்கப்படுகிறது.

ஆதலால் தீயூழை, தீயூழ் துன்பம் தருவதற்குரிய வாயில்களைப் பகுத்தறிவுடன் ஆராய்ந்து செயல்களை மேற்கொண்டு தீயூழையும் நாம் வெற்றிபெற வேண்டும். இதுவே வாழ்க்கையின் நியதி.

குறிக்கோளை உண்டாக்கிக் கொண்டு அக்குறிக்கோளை அடைவதே, வாழ்க்கையின் இலட்சியம். குறிக்கோள் என்று எடுத்துக் கொண்டால் ஆர்வம் நிறைந்த ஆவேசமான முயற்சிகள் தோன்றும். இம்முயற்சிகளுக்கு மலையை நகர்த்தும் பேராற்றல் உண்டு. அதனால், ஊழின் விளைவு வரத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத நியதி.

ஆனாலும் ஊழின் விளைவை ஊழின் தாக்குதலை நம்முடைய முயற்சிகள் வழி, தணிக்கலாம். மிகப் பெரிய பாதிப்புக்கள் ஏற்படாதபடி பாதுகாக்க முடியும். கொடிய கோடையின் வெப்பத்தை ஒரு சாதாரண குடை தடுக்க வில்லையா? சுடு மணலை, காலில் அணிந்து கொள்ளும் செருப்பு, தடுத்துப் பாதுகாக்க வில்லையா?

இலட்சிய வேகத்தில் இடையில் சந்திக்கும் தடைகள் தூள் தூளாவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். ஆதலால், ஊழ் உண்டு. அது மற்றவர் படைப்பு அல்ல. அவரவர்களுடைய சொந்தப் படைப்பே.

ஒருவர் செய்த செயல்களின் விளைவே ஊழ். அவரவர் விளைவுகளின் பயனை அவரவர் அனுபவிக்க வேண்டுமென்பது ஒரு நியதி; ஒரு ஒழுங்கு; அதாவது உலகில் உயிரியலில் உள்ள ஓர் ஒழுங்கு; முறைபிறழா நிகழ்ச்சி “Order