பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

253


‘வாய்மையொடு பொருந்திய அறிவு’ என்றான் போலும்! அமைச்சர்களுடனும் மற்றவர்களுடனும் நல்ல உறவு பேணுதல் வேண்டும். அவர்களை விட்டு அகலவும் கூடாது. அதிகமாக அணுகவும் கூடாது என்பது அரசியல் நெறிமுறை.

பகைமை ஒரு தீய பண்பு. மனிதகுலம் தோன்றிய நாள் தொடங்கிப் பகை இருந்து கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டு வருகிறது. ஏன் பகைமை: சண்டை பொருள் காரணமாகப் பகைமை வரும். பொதுவுடைமை வந்தால் பகைமை நீங்குமா? நீங்காது என்பது பொதுவுடைமை நாடுகள் தந்துள்ள படிப்பினை. அழுக்காறு அகன்றால் பகைமை வராது தவிர்க்கலாம். பழங்காலத்தில் மூன்றின் அடிப்படையில் பகைமை தோன்றியது. அவை முறையே பொன், பெண், மண் அல்லது மண், அதிகாரம், பெண் என்றும் கூறலாம். இன்று இவற்றுடன் பதவியும் புகழும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. பகைமைக்கு மூலகாரணம் அழுக்காறேயாம். இவ்வுலகில் எந்தக் காலத்திலும் பகைமை, பகைமையால் தணிந்ததாக வரலாறில்லை. பகைமை அன்பினாலேயே தணியும். இதுவே அறநெறி. பகைமை தீ என்றால், அத்தீயைத் தணிக்கும் தண்ணீர் நட்பு.

பகை உடைய சிந்தையார்க்கும்
பயன்உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி
இன் உரை நல்கு

(கம்பன் - 4123)

என்று இராமன் சுக்கிரீவனுக்கு அரசியல் நெறி உணர்த்தினான்.

‘தீயன சிந்தித்தல் ஆகாது. பகையே யாயினும் நீ திரும்ப இனியனவே கூறு. சிறியர் என்று கருதித் தீமை செய்யாதே, துன்புறுத்தாதே’ என்று கூறிய இராமன், தன் வாழ்க்கையையே முன்னுதாரணமாக எடுத்துக் கூறுகிறான். ‘நான் நெறிமுறை பிறழ்ந்து கூனிக்கு ஒரு தீமை செய்ததால்,