பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.

(கம்பன் - 12)

என்றான்.

அயோத்தியைத் தலைநகரமாகக் கொண்ட கோசல நாட்டுமக்கள், ஆடவர் - மகளிர் நெறிபிறழாத நேர்மையுடையவர்கள். கோசல நாட்டு மக்களின் நெறி, அறத்தாறு. நேர்மை என்பது நாம் அடிக்கடி கேட்கும் ஒரு சொல். இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டுக்கு நேர்கோடு என்று பெயர். அதுபோல, சொல்லையும் - செயலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் இணைப்பதே நேர்மை எனப்படும். மனமும் சொல்லும், சொல்லும் செயலும் ஒன்றுபடுவது நேர்மை, நேர்மை, உலகியலை நடத்தும் ஒழுகலாறு, மென்ஷியஸ் என்ற சிந்தனையாளன் ‘எனது உயிர் எனக்கு மிக அருமையானது. நேர்மையைக் கடைப்பிடிப்பதும் அதைப் போலவே எனக்கு அருமையானது. இரண்டில் ஒன்று எனக்குக் கிடைக்கும் என்றால் எனது உயிரை விட்டு விடுவேன்; நேர்மையைத்தான் கடைப்பிடிப்பேன்!’ என்றான். கோசல நாட்டு மக்கள் நேர்மை நெறி பிறழாதவர்கள் என்பது கம்பனின் வாக்கு.

அறம் - தருமம்

வாழ்வியலின் அடிப்படைப் பண்புகளை அறம் என்று கூறுவர். தருமம் என்ற வட சொல்லுக்கு நேராக அறம் என்று தமிழில் கூறுவதுண்டு. பொருத்தப்பாடு பற்றி ஆய்வு தேவை.

நெறிப்படி செய்யப்படுதல், ஒழுகலாறு என்று திருக்குறள் கூறுகிறது. தருமம் என்பது நூற்றுக்கு நூறு ஒழுகலாறாக வலியுறுத்தப் பெறுகிறது. எவரையும் மனம், வாக்கு, உடல் ஆகியவற்றால் மறந்தும் துன்புறுத்தாமை, வாய்மை (சத்தியம்) பேணுதல், களவு, காமம், வஞ்சம்,