பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மகிழ்வுக்குரிய செய்தி. நமது உடலுறுப்புக்களில் - பொறிகளில் எல்லாவற்றிற்கும் கதவுகள் உண்டு. அவை நாம் விரும்பி இயக்கினால் மட்டுமே இயங்கும். ஆனால், செவிகள் அப்படியல்ல. செவிகள் எப்போதும் திறந்த நிலையின; கேட்கும் இயல்பின.

செவிச் செல்வம்

செவியின் இயக்கம் வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவை, செவிச் செல்வமாகிய கேள்வியின் பெருமையைத் திருக்குறள் நன்றாக உணர்த்துகிறது. உடன்பாட்டாலும் செவிச் செல்வமாகிய கேள்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறது; எதிர்மறையாகவும் பேசுகிறது.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

(திருக்குறள் - 411)

‘செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்’

(திருக்குறள் - 420)

என்ற குறட்பாக்களை எண்ணுக. மேலும் ‘கற்றிலனாயினும் கேட்க!’ என்றும் அறிவுறுத்துகிறது.

முல்லை நிலத்தில் கால்நடை வளம் நிறைந்துள்ளது. கால்நடைகளை - பால் மாடுகளை - மையமாகக் கொண்டு முல்லை நிலத்தில் வாழ்பவர் இடையர் குலத்தினர்.

மகளிர் நிலை

கம்பன் கோசல நாட்டு மகளிருக்கு, ‘விளைவன யாவையே?’ என்று ஒரு வினாத் தொடுக்கின்றான், அதாவது, கோசல நாட்டு மகளிருக்கு வைகலும்-விருந்தோம்பல், வருந்தி எதிர்ப்படுவோருக்கு ஈதல் இவை தவிர வேறு வேலை இல்லையாம். ஏன் வேறு வேலை இல்லை: கல்வி அறிவு இன்மையாலா? இல்லை! இல்லை! கோசல நாட்டுப் பெண்கள் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்து