பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




1


சங்கத் தமிழர் வாழ்வியல்


தமிழர் வாழ்வியலில் சங்க காலம் புகழ் பூத்த காலமாகும். சங்க காலத் தமிழர் சிந்தனையில், செயலில் சிறந்து விளங்கி வாழ்ந்தனர். சங்க காலத் தமிழர் கருத்து, வளம் செறிந்தது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட்டுச் சிந்தனை, கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றில் தமிழர் வளர்ந்திருந்தமை மகிழ்றற்குரிய செய்தி.

சங்க காலத் தமிழர், சங்கம் அமைத்து மொழியை வளர்த்தனர்; சிறந்த இலக்கியங்களைக் கண்டனர்; கடவுளையும் மன்னனையும் தமிழ் ஆய்வுக்குப் பயன் படுத்தினர்; அதனால் பண்பட்டனர். தமிழர்கள் வாழ்வாங்கு வாழும் நெறியில் ஆர்வலர்கள்.

“எப்படியும் வாழ்வது” என்பது தமிழர் கொள்கை யன்று. வாழும் நெறியில் வாழ்தலும் பயன்பட வாழ்தலும் தமிழர் குறிக்கோள், கோட்பாடு. தமிழர்கள் வாழ்க்கைக்கு இலக்கணம் கண்டவர்கள். தமிழரின் வாழ்க்கை வரிச் சட்டங்களை ஆட்சி படைக்கவில்லை; புலமைச் சான்றோர்களே படைத்தனர். தமிழர், வாழ்க்கையின் செம்மைகளை வாழும் பயிற்சியில் காண முற்பட்டனர்; அரசின் ஆணை வழியல்ல. தமிழர், வையத்து வாழ்க்கையை