பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முரண்பட்ட செய்திகள் பல உண்டு. ஆயினும் நல்ல நூல். அடுத்து அசோகர், இவர் இந்தியாவில் பேரரசை நிறுவியவர். சிறந்த வீரர். தொடக்க காலத்தில் போர்க்களங்கள் பல கண்டு வெற்றி பெற்றவர். ஆயினும் பிற்காலத்தில் போரை வெறுத்தார். சமாதானக் காவலராக விளங்கினார். தமிழ் நாட்டின் மாமன்னர் இராஜராஜன், இராஜேந்திர சோழன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், கரிகாற்சோழன் முதலிய பேரரசர்கள் போர்க்களங்களில் வாகை சூடியவர்கள்.

பண்டைய போர்களும் இன்றைய போர்களும்

இங்ஙனம் உலக வரலாறு, போர்களாலேயே நடத்தப் பெற்றது. இடையிடையே மனித குல முன்னேற்றத்திற்குரிய பணிகள், கலைப் பணிகள் நடந்தன. மிகத் தொன்மைக் காலத்தில் நடந்த போர்கள் அறநெறி சார்ந்த போர்கள். பின் விஞ்ஞான யுகத்தில் நடந்த போர்கள் அழிவுப் போர்கள். அறநெறிச் சார்பே இல்லாத போர்கள். ஏன்? பழங்காலத்தில் போராடிய வீரர்களுக்கு இருந்த வீரத்தில் குறைந்த சதமானம் கூட இக்காலத்தினருக்கு இல்லை. ஒளிந்திருந்தும், மறைந்திருந்தும், இரவிலும் நடத்தும் போர் இன்றைய போர். ஏவுகணைப் போரில் ஏவுகணையைச் செலுத்துபவர் பத்திரமான - பாதுகாப்பான அறைக்குள் தங்கிக் கொள்கிறார். இந்தப் போர்களை வீரப்போர் என்று கூற இயலாது. இந்தப் போர்களில் பெறும் வெற்றிகளை வெற்றியென்றும் பாராட்ட இயலாது.

தமிழ் நாட்டில் நடந்த போர்கள் வீரப் போர்கள். எதிரியிடம் ஆயுதம் இல்லையென்றால் போர் நடத்த மாட்டான்; எதிரிகளின் முதுகில் குத்தமாட்டான். ஒரு குறிப்பிட்ட இடத்தில், களத்தில் பொருதுவான்; பொருது மேற் செல்வான். இரவில் போர் இல்லை. இவையெல்லாம் பண்டையக் காலப் போரில் நிலவிய அறநெறி. இன்று