பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழிவும் இல்லை; அழிக்கப்படுவதும் இல்லை. அதனால் கந்தபுராணத்தில் சூரபதுமன் அழிக்கப்படவில்லை; திருத்தப்பட்டான்; அங்கீகரிக்கப்பட்டான்.

அனுமன் தூது

பழங்காலத்தில் போர் நடைபெறுவதற்கு முன் தூது அனுப்புவது வழக்கம். எந்தக் காரணத்தினால் போர் வரும் என்று கருதப்படுகிறதோ அது பற்றி எதிரி அரசுடன் பேச்சு நடத்துவார். தூதர் மூலம் பேசுவார். இராமகாதையில் சீதையைத் தேடிப்போன அனுமன், எதிர்பாராதவிதமாகத் தூதனாகவும் மாறினான்.

அனுமன் இராமனை முதன்முதலின் சந்தித்த போதே, அனுமனின் சொல்லாற்றலை இராமன் வியந்து;

“இல்லாத உலகத்து எங்கும்
இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்
கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே!
யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில்ஆர் தோள் இளைய வீர!
விரிஞ்சனோ? விடைவ லானோ?”

(கம்பன் - 3768)

என்று இலக்குவனிடம் பேசுகின்றான்.

இத்தகைய அனுமனின் தூது இலக்கியப் புகழ் மிக்க தூது. தூதர்கள் அடக்கம், அமைதியுடையவர்களாகவும், அதே போழ்து துணிவும் உறுதியுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். எதிரிக்கு எந்தச் சூழ்நிலையிலும் எரிச்சலும், கோபமும் உண்டாகும்படி நடந்து கொள்ளக் கூடாது. எதிரிகள் எரிச்சலுண்டாகும்படிப் பேசினாலும் செயல்பட்டாலும் தூது போனவர் எரிச்சலடையக் கூடாது.