பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போரிட்டான் என்ற புகழ் உண்டென விரும்பிப் போரிடுகின்றான் என்பது திருப்பம். கடைசியாக இந்திரசித்து இலக்குமணனால் கொல்லப்படுகின்றான். இந்திரசித்தின் மரணம் இராமனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது. விம்மித முற்றான். சீதையை மீட்டுவிட்டதாகவே எண்ணினான். ‘தம்பியுடையான் பகை அஞ்சான்’ என்று இலக்குமணனைப் பாராட்டினான். இந்திரசித்தன் மரணத்தால் இராவணன் அழுது புலம்புகின்றான். மண்டோதரி புலம்புகின்றாள்.

மூலபலப் படை

இந்த நிலையில் வன்னி என்னும் ஓர் அரக்கன் வருகின்றான். அவன் ‘இனி, சீதையை இராமனிடம் கொண்டுபோய் விட்டாலும் இராம - இலக்குமணர்கள் நம்மைக் கொல்லாமல் விடப்போவதில்லை. ஆதலால், நமது படை முழுதும் மூலபலப்படை உட்பட அனைத்தையும் கொண்டு போராடி இராம - இலக்குமணர்களையும், வானரப் படைகளையும் அழிப்பதே நம்முன் உள்ள கடமை’ என்றனன்.

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று இன்று வழங்கும் பழமொழி கம்பன் தந்ததே! இராவணனின் மூலபலச் சேனையைக் கண்டு வானர வீரர்கள் அஞ்சி ஓடுகின்றனர். அப்போது வானரர்கள் கூறியது.

‘மனிதர் ஆளின் என், இராக்கதர் ஆளின் என் வையம்? என்பது.

இந்த மனப்போக்கு நாடு முழுதும் மக்களிடம் காணப்படுகின்றது. தங்களுடைய நாட்டின் ஆட்சி எப்படி அமையவேண்டும் என்ற சிந்தனை இன்றைய மக்களுக்குக் கிடையாது. குடியரசு நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியற் கடமை