பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறிவு

335


பழுதையைப் பாம்பென்றும், பாம்பைப் பழுதை என்றும் முறை பிறழ்ந்து உணர்தல்! அதுபோலவே நன்மையைத் தீமையென்றும் தீமையை நன்மையென்றும் உணர்தல்: ஒன்றும் தெரியாமையைவிட அறியாமை கொடிது, பெரிதும் துன்பம் தரும்.

மாலை நேரம்! பகலும் இரவும் தம்முள் மயங்கும் நேரம் ! ஒளியை விழுங்கி இருள் மேவும் நேரம்! ஒரு நெடிய மலர்மாலை நெளிந்த தோற்றத்தில் கிடக்கிறது. உள் பொருளை உள்ளவாறு அறிய இயலாத நிலை. இருட்டு காரணமாகக் கட்புலனில் அந்த மாலையின் நீளமும் தெளிவும் பாம்பின் தோற்றத்தைக் காட்டுகின்றன. தேர்தல் இல்லை; தெளிவும் இல்லை! பயம்! பாம்பு என்ற அடிப்படையில் பயம் வந்துவிட்டது: மானுடத்தின் கொடிய பகை அச்சமே! அச்சமும் பயமும் ஒரு பொருட் கிளவிகள். அஞ்சி அஞ்சிச் சாவார் வாழ்விற்குரியரல்லர். இதுபோல நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐம்பூதங்களால் ஆய சடவுலகம் மாறுதலுக்கு இசைந்த உலகம்; அழியும் தன்மை யுடைய உலகம். இந்த உலகத்தின் தன்மை, பரம்பொருளைகடவுளைக் காண இயலாவண்ணம் மறைத்துவிடுகிறது. ஆம்! கண்டதே காட்சி! கொண்டதே கோலம்! இதுவே மயக்க நிலை; அறியாமையின் வெளிப்பாடு. இந்தச் சூழலிலிருந்து தப்பி, உண்மையைத் தேறுதல் வேண்டும்; தெளிதல் வேண்டும். இஃது எங்ஙனம் சாலும்? அறிவுதான் அறிவைத் தூண்ட இயலும். உண்மைதான் உண்மையைக் காணத் துணை செய்ய இயலும், “அவனருளாலே அவன்தாள் வணங்கி” என்றும், “காண்பார் யார் காட்டாக்கால்” என்றும் வரும் அருள் மொழிகளை உணர்க.

மெய்யுணர்தல் வாழ்க்கையின் குறிக்கோள்; ஆக்கம்; பயன். உண்மையும் இன்மையும் கலந்து கிடக்கும் இந்த உலகில் உண்மையை உணர்தல் வேண்டும். உண்மையை உணர்தலுக்கு, உண்மையைத் தேடும் பசி வேண்டும். அந்த