பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிசிராந்தையார் பெருவாழ்வு

67



வீட்டிற்கு அணிகலன் செய்யும் மனைவி, நல்லாள் ஆயினள். மக்கள் நல்லவராயினர். இளையர் இனியவராயினர். இவர்களால் வீடு விழுமிய நலன்கள் சிறந்ததாக அமைந்தது. நல்வாழ்க்கைக்கு இதுபோதாது. நாடும் நன்றாக இருக்க வேண்டும்.

நாட்டின் நடைமுறை அரசைச் சார்ந்தது. நாட்டில் நல்லன நடந்தாலும் சரி, தீயன நடந்தாலும் சரி, அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். அரசு மறுக்கப் பெறாத - மறுக்க முடியாத அதிகாரத்தின் சின்னம். அந்த அரசு தன் அதிகாரத்தை நாட்டுமக்களை நல்ல முறையில் வாழ்விக்கப் பயன்படுத்த வேண்டும். அரசு நல்லனவே செய்யவேண்டும் அல்லன செய்யக் கூடாது.

பிசிராந்தையார் கண்ட அரசு, அல்லன செய்யாத அரசு, நல்லனவே செய்த அரசு. அதுமட்டுமா! உயிர்களைக் காத்த அரசு, பிசிராந்தையாருக்கு நாட்டிலும் கவலையில்லை வீட்டிலும் கவலையில்லை. நாடும் வீடும் நல்லவாறு அமைந்துவிட்டால் போதுமா? நாட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் ஒரு பொல்லாத உலகம் இருக்கிறதே! அந்த உலகமும் செப்பமாக இருந்தால்தானே நிறைநல்வாழ்வு கிடைக்கும். அந்தப் பொல்லாத உலகம் எது? அதன் பெயர்தான் ஊர் என்பது.

ஊர் என்பது ஊரினைச் சார்ந்த ஊராரைக் குறிக்கும். ஊரிலுள்ள தோட்டங்களுக்கு வேலியுண்டு. ஆனால் ஊராரின் வாய் வம்பளப்புக்கு வேலியில்லை. அவர்கள் நான்குபேர் கூடினால் எதையும் பேசுவர்; இல்லாததை உருவாக்கி விடுவர்; இருப்பதை மறைத்துவிடுவர். அம்மம்மா! ஊரார் என்ற இந்தப் பொல்லாத சமூகத்திற்கு அஞ்சி வீண் பெருமைக்காக - ஊர் மெச்சுவதற்காக வீட்டுச் சடங்குகளைக் கடன்பட்டுச் செய்து ஏழையரானோர் எத்தனை பேர்? ஏன்? ஊராரின் கொட்டம் அதிகமானதற்கு