பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறியின் தொடக்கம். வாழ்க்கையின் அருமைப்பாட்டை உணர்தல், வாழ்க்கையின் நோக்கத்தையறிதல், வாழ்வாங்கு வாழக் காமுறுதல், ஒழுங்குகள் கால் கொள்ளுதல், ஒழுக்கநெறி நிற்றல் ஆகியன தலையெடுக்கச் செய்து தனி மனிதனையும் சமுதாயத்தையும் வழி நடத்துவதே சமயம், ஆதலால், தொல்காப்பியம் சமய இலக்கியம் என்று அழைக்கப்பெறாவிட்டாலும் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழரின் சமய அனுபவம் மெய்ப்பொருளியல் அடிப்படையிலானது. உலகியலை-உலகியலின் நிகழ்வுகளை ஆய்ந்து, சிறந்த செம்பொருள் காணும் ஆர்வமுனைப்பில், வாழ்க்கையில் முகிழ்த்த - நெறி-செந்தமிழ்ச் சமயநெறி. இக்கருத்தினைத் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் கூட நமக்குத் தருகின்றன.

எழுத்துக்களை “உயிரெழுத்து” என்றும், “மெய்யெழுத்து” என்றும், “உயிர்மெய்யெழுத்து” என்றும் முத்திறப் படுத்திய நுண்ணறிவு உயிரியல் வரலாற்றில் உண்மையாகி வருகிறது. உயிர்கள் பிறப்பு, இறப்பு இல்லாதவை. உயிர்கள் பிறத்தல்-இறத்தல் என்று நிகழ்வன, உடல் மாற்றங்களைப் பற்றியன-உயிர்கள் என்றும் உள்ளவை; தலைமைக்குரியவை. உயிரெழுத்துக்களின் முதலெழுத்தாகிய 'அ'வின் இலக்கணமும் இதுவேயாம். உடம்பினுள் இயங்கும் ஒலிக்கு முதலாகிய நாதம் ‘அ’ எழுத்து வடிவத்திலேயே இயங்குகிறது. உயிரின் இயக்கத்திற்கு உடம்பு கருவி, உயிர் இயக்கினாலொழிய உடம்பு தானே இயங்காது. மெய்யெழுத்தின் நிலையும் அதுவே. உயிரும் மெய்யும் கூடிய நிலையில் இயக்கங்கள் விரிவடைகின்றன. உயிர் மெய்யெழுத்தும் அப்படியே. பொருளதிகாரத்திலும் கடவுள் வாழ்த்து, மனையற வாழ்க்கை, துறவற வாழ்க்கை ஆகியன குறித்து விளக்கும் தொல்காப்பியத்தை ஒரு சிறப்பான சமய இலக்கியமெனக் கூறல் தவறன்று. ஆயினும் இன்றுள்ள நிலையில்