பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமய இலக்கியங்களில் அறநெறி

345


களைச் சந்தித்தல், அவர்களுடன் பழகுதல், அதுபோழ்து ஏற்படும் புகழ்ச்சி இகழ்ச்சிகளைப் பொருட்படுத்தாதிருத்தல், பயண வழியில் பெறும் இன்பதுன்பங்களிற் சமநிலை உணர்வைப் பெறுதல் ஆகிய அறநெறிப் பண்புகள் கிடைக்கும். ஆறு, கடல் ஆகியன துய்மையின் சின்னங்கள்; பொதுமையைக் கற்பிக்கும் கழகங்கள். எந்த நாட்டிலும் குட்டைகள் தீர்த்தமாவதில்லை. ஏன்? அவை எல்லைக்குள் முடக்கப்பட்டவை. அவை தேக்கமுடையவை. அவைகட்குப் போக்கும் இல்லை, வரவும் இல்லை. ஆனால், ஆறு அப்படியா? கங்கை இமயமலையின் உச்சியில் தோன்றி மண்ணில் வீழ்ந்து பல நூறு கல்தொலைவு ஒடிச்சென்று கடலைச் சார்கிறது. உயர்ந்த இலட்சியப் பயணத்தின் பெருக்கன்றோ கங்கை? மலையினின்றும் அது மண்ணுக்கு வருகிறது. ஏன்? அது மண்ணுக்கு வளம் சேர்க்கவும் மனித குலத்திற்கு வாழ்வளிக்கவும் வருகிறது. இந்த உயர்ந்த இலட்சியத்தோடு அது தடைகளைக் கடந்து, விளைவுகளைக் கடந்து உயிர்க்குலம் அனைத்துக்கும் வாழ்வளித்துக் கடலைச் சார்கிறது. இடையில் அதனைத் தீர்த்தம் என்று போற்றிக் குளிப்பாரும் உளர்; அறியாமையால் அதனை மாசுபடுத்து வாரும் உளர். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அது பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நினைப்புக்களோடு கங்கையிற் குளித்தால், கங்கை நீரால் உடல் தூய்மையாகிறது. கங்கையின் பெருந்தன்மையை, இலட்சியப் பயணத்தை, உயிர்க்குலமனைத்துக்கும் கைம்மாறு கருதாது வாழ்வளிக்கும் பண்பாட்டினை, தூய்மையின்மையையே தூய்மையாக்கிக் கொண்டு வாழ்வளிக்கும் நிகழ்ச்சிகளை நினைக்கும் பொழுது மனம் தூய்மையாகிறது. அங்ஙனம் மனம் தூய்மையானால் “இங்கு ஈசன், அங்கு ஈசன்” என்று சொல்லார். அவர்கள், 'ஈசன் எங்கும் இருக்கின்றான்; எல்லா உயிர்களிடத்தும் இருக்கின்றான்' என்று கருதி அன்பு செய்வர். இந்த அன்பு நெறியே அறநெறி. இதனை அப்பரடிகள்,