பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

351


பிறவிலேயே இருமை யின்பமும் அடைந்த அருளியற் சமர்த்தர் நம்பியாரூரர்.

நம்பியாரூரர் பெருமை

நம்பியாரூரரைப் புகழ்ந்து போற்றியர்வர்கள் பலர். நால்வர் புகழ் போற்றுவதில் சிவப்பிரகாசர் இயற்றிய நால்வர் நான்மணிமாலை முதன்மையானது. பரவையாரின் ஊடல் நீக்க, நாயகனை-இறைவனைத் தூது அனுப்பியது தவறு என்பது கலிக்காமர் கருத்து. இதனைக் கலிக்காமர்,

நாயனை அடியான் ஏவும்
காரியம் நன்று சால
ஏயும்என் றிதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம்!

(ஏயர்கோன் புரா. 384)

என்று கூறுவதாகப் பெரியபுராணம் பேசும். நம்பியாரூரர் இறைவனை உற்றுழி உதவ வேண்டுகிறார். அவ்வளவுதான். இக்குறை முடிக்க இறைவனே செல்ல வேண்டும் என்பதில்லை.

இறைவன் திருவுள்ளம் பற்றியிருந்தால் பிற வழிகளிலும் பரவையாரின் ஊடலைத் தீர்த்திருக்க முடியும். தம் தோழனுக்கு உற்ற குறையைத் தாமே முடித்தலே இனிது; தோழமைக்குரிய இயல்பும் இதுவே.

எனவே, இறைவன் அடியார்க்கு எளியனாயிருக்கும் பாங்கினை விரும்பித் தானே தூது சென்றான். அதுவும் ஒரு நடையில் முடிக்காமல், பிரிவை நீட்டித்துக் காதலின் - தோழமையின் அருமைப் பாட்டை உணர்த்த இரண்டாந் தடவையும் நடந்தான்.

பரவையாரிடம் தூது சென்றமையால் இறைவன் தன் எளிமையையும் “நமக்கு அன்புபட்டவர் பாரமும் பூண்பர்"