பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



படுத்திப் பின் மெய்ப் பொருளும் திருவும் கூட்டுவிக்கிறான் என்ற உண்மையை உணர்த்துகின்றார்.

பிழை பொறுத்தல் மட்டும் போதாது. பிழை தவிர்க்கவும் பணிக்கவேண்டும் என்ற வாழ்வியல் நெறி உணர்த்தப் பெறுகிறது.

சேரமான் தோழர் திருவாரூருக்குப் பயணமானார். அதுபோழ்து சேரமான் பெருமான் பெரும்பொருள்களுடன் சேரமான் தோழருக்கு விடை தந்து வழியனுப்பி வைத்தார். இடைவழியில் திருமுருகன் பூண்டி வருகின்றார், சேரமான் தோழர்!

திருமுருகன் பூண்டியில் கடவுள் ஆணைவழி, பொருள்கள் வழிப்பறி கொள்ளப்படுகின்றன. சுந்தரர் திருமுருகன் பூண்டித் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை நோக்கி,

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித்
திருடு மொட்டெனக் குத்திக் கறைகொண்டு ஆறலைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முரு கன் பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங் கிருந்தீர் எம்பிரானீரே

(7.49.1)

என்று பாடுகிறார்.

வேடுவர் வழிப்பறி செய்கின்றனர். “நீர் எதற்காக இங்கு இருக்கின்றீர்” என்று வினவும் முறையில் இந்தப் பதிகம் முழுவதும் அமைந்துள்ளது. இறைவன் வழிப்பறி செய்த பொருள்களைத் திரும்பத் தந்தருளினன்.

இந்த நிகழ்ச்சிக்கும் - அதாவது நம்பியாரூரர் கொண்டு வந்த - சேரமான் பெருமாள் தந்த பொருளை வழிப்பறி செய்தமைக்குச் சேக்கிழார் ஒர் அருமையான