பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பின் கமலாலயம் திருக்குளத்தின் வடகிழக்குக் கரைக்கு வந்து சேர்ந்தார். பரவையாரைக் கரையிலிருக்கச் செய்துவிட்டுத் திருக்குளத்தில் பொன்னைப் போட்டு எடுப்பவர் போல தடவி எடுக்க முயல்கின்றார். பொன் கிடைக்கவில்லை நம்பியாரூரரின் நற்றமிழ்ப் பாடல்களை அனுபவிக்கும் திருவுள்ளத்தாராகிய இறைவன் பொன்னைத் தருவதில் காலந்தாழ்த்துகின்றார். பரவையாரோ 'ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் பெரியீர்!’ என்று வினவுகின்றார். நம்பியாரூரருக்கோ நிறைந்த வருத்தம்! தன்னுடைய நிலை பரவையாரால் நகைக்கக் கூடியதாக ஆகிவிடக் கூடாதே என்று வருந்துகின்றார். ஆண்மையாளர்கள் பெண்ணின் நகைப்பைத் தாங்குவதில்லை. இது வரலாறு. இராவணன் நாடு இழந்ததற்குக் கவலைப்படவில்லை; கொற்றம் இழந்ததற்குக் கவலைப்படவில்லை. செருக்களத்தில் சாவப் போவதைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை; சீதை சிரிப்பாளே என்று தான் கவலைப்படுகின்றான்.

"வான்நகும், மண்ணும் எல்லாம் நகும், மணி
                                                      வயிரத்தோளன்
நான்நகும் பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு
                                                            நாணான்.
வேல்நகுநெடும் கண் செவ்வாய் மெல் இயல் மிதிலை
                                                                 வந்த
சானகி நகுவள்"

என்றே கவலைப்படுகின்றான். பாஞ்சாலி துரியனை நகைத்தமையினாலேயே பாரதப்போர் நடந்தது.

நமது நம்பியாரூரரும் இறைவனிடம்


"தன்செய்ய வாயில்நகை தாராமே தாரும்."