பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுறைகளின் பண்புகள்

65




பலர் இறைவனைக் காட்சிப் பொருளாக-கோயிற் பொருளாக-கற்பனைப் பொருளாகக் காண்கின்றார். ஆனால் திருமுறைச் செல்வர்களோ கருத்துப் பொருளாக அனுபவப் பொருளாக-வாழ்வுப் பொருளாகக் கண்டார்கள். நமக்கும் அப்படியே காட்டுகின்றார்கள். புலன்வழித் தொண்டினால் கடவுள் நெறி கூட்டி, பொறிவழித் தொண்டினால் மக்கள் சேவையின் மாண்பினை உணர வைத்திருக்கிறார்கள். நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தரின் தீந்தமிழ்க் கவிகள் கருத்தைக் கரைய வைத்துச் சமயச்சார்புடைய சிந்தனைக்கு வித்திடுகின்றன; ஆளுடைய பிள்ளை அருளிய எளிய இனிய தமிழ்ப் பனுவல்கள் அருள் வாழ்வுக்கு நம்மை யாற்றுப்படுத்துகின்றன. குறிக்கோளில்லாது கெட்டொழியும் நமக்கு நல்லதொரு கொள்கைப் பற்றை-இலட்சியத்தை-குறிக் கோளைத் திருமுறைகள் கொடுக்கின்றன; தமிழ் நெடுங்கணக்கிலேயுள்ள உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டினைப் போல் பழமை வாய்ந்த நீண்ட சமயவரலாற்றிலே பன்னிரு திருமுறைகளும் உயிர்போன்றவைகளாகத் திகழ்கின்றன.

துன்பங்களை இன்பங்கள் எனக் கருதும் அறியாமையினால் மனிதன் அல்லலுறுகிறான்; வீதியிலே நடக்கின்றான்; ஏதோ சில எண்ணங்களினால் தன்னையும் தான் கடந்து செல்கின்ற சாலையையுமே மறக்கின்றான்; வழிபார்த்து நடக்காமையினால் கல்லில் மோதுகின்றான்; காலில் புண்ணுண்டாகி விடுகின்றது. "காலில் என்ன? கட்டுப் போட்டிருக்கிறாயே!” என்று யாராவது கேட்டால் "கல் இடித்து விட்டது" என்று கூறித் தன் குற்றத்தைக் கல்லின் மேல் சுமத்தி விடுகின்றான். அது போலத்தான் உயிர்கள் அறியாமையினாலேயே பலப்பல அல்லல்களுக்கு ஆளாகின்றன.

நங்கை ஒருத்தி ஆமைக்கறி சமைக்கிறாள். அடுப்பிலே மூட்டி ஆமை போட்ட உலையை ஏற்றுகிறாள்! சற்றுச்