பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 53

கிழவனைப் பிடித்துக் காட்டிக் கொடுப்பதில் என்ன புதுப் பெருமை வந்து விடப் போகிறது?' என்று எண்ணியே பூரணி அவனைப் போக விட்டாள்.

அருகில் நெருங்குவதற்கே அஞ்சி அரண்டு நின்று கொண்டிருந்த கமலா, பூரணிக்குப் பக்கத்தில் வந்தாள்.

'காலம் எவ்வளவு கெட்டுப் போய்விட்டது? முகத்தையும் பேச்சையும் பார்த்து எந்த மனிதர்களையும் நம்பி விட முடியாது போலிருக்கிறதே! மிகவும் நல்லவனைப் போலப் பேசிக்கொண்டு வந்தவன் ஒரே கணத்தில் கழுத்தில் கை வைத்து சங்கிலியை அறுத்தானே பார்த்தாயா? பூரணி உன்னைப் போல் ஒரு துணிச்சல்காரி மட்டும் உடன் வந்திருக்காவிட்டால் சங்கிலியைத் திருட்டுக் கொடுத்து விட்டுக் கண்களைக் கசக்கி கொண்டு வீட்டில் போய் நிற்பேன்" என்று பூரணியின் துணிவை வியந்து பேசத் தொடங்கினாள் கமலா. பூரணியின் வலது கையால் அவள் வாயைப் பொத்தினாள்.

'போதும் கமலா ஏதோ கெட்ட சொப்பனம் கண்டு விழித்துக் கொண்ட மாதிரி இதை மறந்துவிடு. இருவருமே முன் யோசனையின்றி இந்த நேரத்துக்கு இங்கு வீடு தேடிக் கொண்டு வந்ததே தப்பு. வா; மற்றவர்கள் வந்து இந்த வெட்கக் கேட்டை விசாரிப்பதற்கு முன் இங்கிருந்து போய்விடலாம்' என்று கமலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினாள் பூரணி.

கீழ இரதவீதித் திருப்பத்தில் வந்ததும், தெரு விளக்கின் ஒளியில் பூரணியின் கைகள் தற்செயலாகக் கமலாவின் பார்வையில் பட்டன. .

வளையல் உடைந்து நகங்களால் கீறிய காயங்களோடு கன்றிச் சிவந்து போயிருந்த அந்தப் பூக்கரங்களை விளக்கொளியில் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள் கமலா

வெண்ணிறக் காகிதத்தில் தாறுமாறாக விழுந்த சிவப்பு மைக்கீறல் மாதிரி அந்த அழகிய முன் கையில் நகக்கீறல்கள் குருதிக்கோடு இழுத்திருந்தன. கமலாவின் கண்களில் அதைக் கண்டதும் நீர் மல்கி விட்டது. பூரணியின் முகத்தைப் பார்த்தாள். அவள் துன்பத்தையும் உணராது போல் முகம் மலரச் சிரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/55&oldid=555779" இலிருந்து மீள்விக்கப்பட்டது