பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

பாப்பா:- அப்பா! அம்மா வயிற்றில் தங்கச்சி எப்படி உண்டானால். எப்படி வளர்ந்தாள், எப்படி அம்மா வயிற்றிலிருந்து வெளியே வந்து பிறந்தாள் என்ற அதிசயங்களைச் சொன்னயே நானும் அம்மா மாதிரி பெண்தானே: என் வயிற்றிலும் குழந்தை உண்டாகலாமல்லவா?

அப்பா:- ஆம், அம்மா. நீயும் பெண்தான். உன் வயிற்றிலும் குழந்தை உண்டாகலாம். ஆனால் இப்பொழுது உண்டாகாது.

பாப்பா:- அது என்ன அப்பா! நீ சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! குழந்தை உண்டாகலாம். ஆனால் இப்பொழுது உண்டாகாது என்று சொல்லுகிறயே, கொஞ்சமும் எனக்குத் தெரியவில்லையே, அப்பா!

அப்பா:- அம்மா: உன் வயிற்றிலும் இரண்டு முட்டைப் பைகள் உண்டு. அவற்றில் ஏராளமான முட்டைகளும் உண்டு. ஆனாலும் அவைகள் குழந்தைகள் ஆக முடியாது.

பாப்பா:- அது ஏன் அப்பா! நன்றாக விளக்கிச் சொல்லு,

அப்பா:- அம்மா! ஆண் தாது சேர்ந்தால்தானே பெண் முட்டை குழந்தையாக வளர முடியும்?

பாப்பா:- ஆம், அப்பா, அப்படி ஆண் தாது சேர்ந்தால் என்னுடைய வயிற்றிலுள்ள முட்டை குழந்தையாகாதோ?

அப்பா:- ஆண் தாது சேர்ந்தால் குழந்தை ஆகலாம், ஆனால் ஆண் தாது உன்னுடைய முட்டையுடன் சேர முடியாது, சேர்ந்து குழந்தை ஆக முடியாது.

பாப்பா:- அப்படி ஏன் அப்பா, ஆண் தாது என்னுடைய முட்டையுடன் சேர முடியாது?