பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

பாப்பா:- ஆம், அப்பா! இந்த மொட்டு விரிந்து தான் பூவாகிறது. ஆனால் இது பூ மாதிரி நல்ல மஞ்சள் நிறமாக இல்லையே, இதில் வாசனையைக் காணோமே, ஏன் அப்பா!

அப்பா:- அம்மா, பூ விரியும்போதுதான் நல்ல நிறமும் மணமும் உண்டாகும்; அப்பொழுதுதான் பூவானது பருவம் அடைகின்றது. சரி இப்பொழுது இந்த மொட்டிலுள்ள இதழ்களை மெதுவாக விரித்து உள்ளே என்ன இருக்கிறது பார்.

பாப்பா:- அப்பா! இதோ பார்த்தாயா அப்பா! இந்த மொட்டுக்குள்ளும் கீலமும் கேசரமும் இருக்கின்றன.

அப்பா:- ஆம், அம்மா! அவைகள் மொட்டிலும் உண்டு. ஆனால் அவை விரிந்த பூவில் இருப்பதுபோல் இருக்கின்றனவா?

பாப்பா:- இல்லை அப்பா! அவைகள் சிறியதாகவும் இருகின்றன. மகரந்தப் பொடியையும் காணோம், அது ஏன் அப்பா !

அப்பா:- அம்மா! கேசரங்களின் நுனியில் தடிப்பாயிருக்கிறது பார், அவைதானே மகரந்தப்பைகள். மகரந்தப் பொடி அவைகளுக்குள்ளாக இருக்கும், ஆனால் அது நன்றாக விளையவில்லை. அது விளைந்தால் தானே. அந்தப் பைகள் வெடித்து வெளியே வந்து சிந்தும்.

பாப்பா:- அப்படியானால் இந்த மொட்டில் காயும் விதையம் உண்டாகாதோ அப்பா!

அப்பா:- காயும் விதையும் மொட்டில் எப்படி உண்டாகும்? காயும் விதையும் உண்டாக வேண்டுமானால் முதலில் மகரந்தப் பொடி சிந்த வேண்டும். அதன்பின் அது கீலாக்ரகத்தில் பட வேண்டும். அந்தப் பொடி நீண்டு கீலத்தின் ஊடே இறங்கி சூல்வயிற்றிலுள்ள முட்டையுடன் கலக்க வேண்டும். அதெல்லாம் நடந்தால்தானே காயும் விதையும் உண்டாகும் அம்மா!